கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், காளையை அடக்க முயன்ற அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த வீரர், மாடு முட்டியதில் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டி புனித சந்தியாகப்பர் கோயில் திருவிழா, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டி காலையில் தொடங்கியது. அதில், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 831 காளைகளும், 333 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
காளைகளும், வீரர்களும் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து, வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடி கொடுக்காமல் சென்ற காளைகளுக்கும் விழாக் குழுவினர் சார்பில் வெள்ளிக் காசு, பீரோ, கட்டில், சைக்கிள், சேர், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற வீரர்களும், காளை உரிமையாளர்களும் பரிசுகளை அள்ளிச் சென்றனர். இதனைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், போட்டியின் போது காளையை அடக்க முயன்ற அலங்காநல்லூரை சேர்ந்த பாலகுரு (24) என்ற மாடுபிடி வீரரை மாடு கழுத்தில் குத்தியது. அதில் படுகாயம் அடைந்த பாலகுரு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதுமட்டுமின்றி, மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 34 பேர் காயமடைந்த நிலையில், அதில் 10க்கும் மேற்பட்டோர் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்த போதிலும், சமீப காலமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு விதிமுறைகளை தளர்த்தியதால், குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
குறிப்பாக, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை சுற்றி 5 கி.மீ சுற்றளவுக்குள் திறந்த கிணறு, தொட்டி, இருப்புப்பாதை போன்றவை இருந்தால் தடுப்புகள் அமைக்க வேண்டும். ஆனால், மாடுகள் நிற்கும் இடத்தில் திறந்த கிணறுகள் இருந்ததாகவும், உரிய தடுப்புகள் இல்லாததும் தெரியவந்துள்ளது. ஏனென்றால், கடந்த காலங்களில் கிணறுகளில் காளைகள் விழுந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
பார்வையாளர்கள் அமரும் கேலரி உறுதியாக அமைக்கப்பட வேண்டும். இருபுறங்களிலும் எட்டடி உயர இரட்டை தடுப்பான்கள் இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அமைக்கப்படாமல், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பெண்கள், கைக்குழந்தைகளுடன் நின்று பார்வையிட்டனர். இரட்டை தடுப்பான்கள் இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.
வாடிவாசல் வெளியே அமைக்கப்பட்ட கேலரியில் மின்கம்பிகள் செல்லும் இடத்தில் பெண்கள், குழந்தைகள் ஆபத்தான முறையில் நின்று ஜல்லிக்கட்டை பார்வையிட்டனர். சாமியான பந்தலும் அமைக்கப்படாததால், குழந்தைகள் மயங்கி விழும் சூழல் இருந்தது. மேலும், கூட்டம் அதிகமாக இருந்ததால், சில இளைஞர்கள் வீட்டு சிமெண்ட் ஸ்லாப்பில் நின்றும் பார்வையிட்டனர். இதில், செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க எந்தவித ஏற்பாடும் செய்யப்படவில்லை.
மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு:
மேலும், வீரர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் செய்யப்படாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி, வீரர்களை கலைத்தனர். ஆன்லைன் டோக்கன் முறை ரத்து செய்யப்பட்ட நிலையில், விழாக்குழுவினர் அவர்கள் விருப்பத்திற்கு வசூலில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, மாவட்ட நிர்வாகம் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

