முதலாழ்வார்கள் வாழ்ந்த காலத்தே, உடன் வாழ்ந்த ஆழ்வார் திருமழிசையாழ்வார். இவரது பிறப்பும் கண்ணனின் அவதாரத்தை ஒத்தது. தேவகியின் மகனாகப் பிறந்து, யசோதையின் அரவணைப்பில் வளர்க்கப் பெற்றது போல திருமழிசை ஆழ்வார் வளர்ந்தார்.
திருமாலின் அடியவராய்த் திகழ்ந்த பார்க்கவ முனிவருக்கும் கனகாங்கி என்னும் தேவமங்கைக்கும் திருமழிசை என்ற ஊரில் பெருமாளின் சுதர்சன சக்கரத்தின் அம்சமாய் அவதரித்தவர் திருமழிசையாழ்வார்.
கை, கால்கள் இன்றிப் பிறந்ததால் பெற்றோர் இக்குழந்தையை ஒரு பிரம்புப்புதரின் கீழ் போட்டுவிட்டுச் செல்ல. பிறகு பெருமாளின் அருளால் உருப்புகள் வளர்ந்து, பசி மிகுதியால் அழுத போது திருமகளே பாலமுது தந்தார் என்கிறது குருபரம்பரை.
பிரப்பங்காட்டில் இருந்த இக்குழந்தையை, பிரம்பு வெட்டிச் செல்ல வந்த திருவாளன் என்பவர் கண்டார். கண்ணுக்கு இனிய அக்குழந்தையைத் தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்றார். இக்குழந்தையோ பால் அருந்தவில்லை. பசியென்று அழவும் இல்லை.
ஆனாலும் பிறந்த பச்சிளங்குழந்தை உண்ணா நோன்பு இருந்ததால் பார்ப்போருக்கு மனம் பதைத்தது. அதில் ஒருவர் தன் மனைவி யிடம் பசும்பாலைக் காய்ச்சி இனிப்புச் சுவையேற்றிக் கொடுக்கச் சொல்ல, குழந்தையும் பால் அருந்தத் தொடங்கியது. காலம் பல சென்ற பின்னர் ஓர் நாள் சிறுவனான அக்குழந்தை சிறிது பாலை மட்டும் அருந்தி விட்டு மீதியை அத்தம்பதியினரைப் பருகக் கூற, அருந்தியவுடன் அவர்கள் முதுமை நீங்கியது. இளமை பெற்ற அவர்களுக்கு இப்பாலின் மகிமையால் குழந்தையொன்று பிறக்க அக்குழந்தைக்கு களிக்கண்ணன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
சீரும், சிறப்புமாய் வளர்ந்த களிக்கண்ணனும் திருமழிசை சீடர் ஆனார். ஆரம்ப காலங்களில் சைவ சமயத்தை சார்ந்திருந்தார் திருமழிசை. இவரை முதல் ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார், வைணவ சமயத்தை ஏற்கச் செய்து, திருமந்திர உபதேசம் செய்தார்.
பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் பதிமூன்று திவ்விய தேசத் திருக்கோயில்களில் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.