அமெரிக்க அணிக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் அணிகள் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்க அணியானது தங்களின் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணியை எதிர்கொண்டது. நவி மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணிக்கு பிரியன்ஷ் ஆர்யா மற்றும் நாராயண் ஜெகதீசன் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரியன்ஷ் ஆர்யா 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய திலக் வர்மாவும் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த ஜெகதீசன் கேப்டன் ஆயுஷ் பதோனி இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஜெகதீசன் 49 பந்துகளில் சதம் விளாசினார். அதன்பின் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 104 ரன்களை சேர்த்த கையோடு ஜெகதீசன் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஆயுஷ் பதோனி அரைசதம் கடந்தார். மேற்கொண்டு இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயுஷ் பதோனி 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 60 ரன்களை சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்.
இதன் மூலம் இந்திய ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 238 ரன்களை சேர்த்தது. அமெரிக்க அணி தரப்பில் அலி கான், ஷுபம் ரஞ்சனே மற்றும் ஜஸ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்க அணிக்கு ஆண்ட்ரிஸ் கஸ் மற்றும் கேப்டன் மொனாங்க் படேல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் மொனாங்க் படேல் 10 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சாய்தேஜா முக்காமல்லா ரன்கள் ஏதுமின்றியும், மிலிந்த் குமார் 18 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். அதனைத் தொடர்ந்து அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஆண்ட்ரிஸ் கஸும் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 41 ரன்களை சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களை சேர்க்க தவறினர்.
இதன் காரணமாக அமெரிக்க அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய ஏ அணி தரப்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மத் மற்றும் நமன் திர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய ஏ அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் நமீபியாவுக்கு எதிராக இந்திய ஏ அணி விளையாடவுள்ளது.

