தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது மார்ச் 8ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்ததுடன், மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
மறுபக்கம் நியூசிலாந்து அணியானது மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்தித்து கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. இதனையடுத்து, நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கவுக்கு எதிராக 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் மார்ச் 15ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இத்தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி ஏற்கெனவே அறிவித்தது. அதில் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய கேப்டன் ஐடன் மார்க்ரம், குயின்டன் டி காக், டெவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, மார்கோ ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அணியின் கேப்டன் பொறுப்பு கேசவ் மஹாராஜிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகி இருந்த டோனி டி ஜோர்ஸி, ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்டோரும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். மேற்கொண்டு ஜார்ஜ் லிண்டே, பிரனாலன் சுப்ராயன், ஜேசன் ஸ்மித், ஓட்னியல் பார்ட்மேன், லுதோ சிபம்லா ஆகியோருடன் அறிமுக வீரர்கள் கானர் எஸ்டெர்ஹுய்சென், டயான் ஃபாரெஸ்டர் மற்றும் ஜோர்டான் ஹெர்மன் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் மிட்செல் சன்ட்னர் முதல் மூன்று போட்டிகளிலும், கடைசி இரண்டு போட்டிகளில் டாம் லேதமும் அணியை வழிநடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஃபின் ஆலன், டிம் செஃபெர்ட், கிளென் பிலீப்ஸ், டேரில் மிட்செல் உள்ளிட்டோருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கெடென் கிளார்க், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு நியூசிலாந்து அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மறுபக்கம் டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடிய கைல் ஜேமிசன், ஜிம்மி நீஷம், கோல் மெக்கன்ஸி, பென் சீயர்ஸ் மற்றும் இஷ் சோதி ஆகியோரும் இந்த தொடருக்காக நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளனர்.
நியூசிலாந்து அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), கேட்டீன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டேன் கிளீவர், டெவன் கான்வே, லாக்கி பெர்குசன், ஜாக் ஃபோல்க்ஸ், பெவன் ஜேக்கப்ஸ், கைல் ஜேமீசன், நிக் கெல்லி, டாம் லாதம், ஜெய்டன் லெனாக்ஸ், கோல் மெக்கோஞ்சி, ஜிம்மி நீஷாம், டிம் ராபின்சன், பென் சியர்ஸ், நாதன் ஸ்மித், இஷ் சோதி.
தென்னாப்பிரிக்க அணி: கேசவ் மகாராஜ் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், ஈதன் போஷ், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி சோர்ஜி, கானர் எஸ்டர்ஹூய்சென், டியான் ஃபாரெஸ்டர், ஜோர்டான் ஹெர்மன், ரூபின் ஹெர்மன், ஜார்ஜ் லிண்டே, நகோபானி மொகோய்னா, ஆண்டிலே சிமெலேன், லூத்தோ சிபம்லா, ப்ரீனெலன் சுப்ரயன்,ஜேசன் ஸ்மித்.

