ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஹாங்காங்கின் அன்கஸ் எங் கா லாங்கை வீழ்த்தி இந்திய வீரர் லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இந்தாண்டு சீசன் தற்போது இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இத்தொடரில் பங்கேற்க இருந்த இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக துபாய் விமான நிலையத்தில் சிக்கினார். அதன்பின் தற்போது அவர் பத்திரமாக நாடு திரும்பினார்.
இதன் காரணமாக அவர் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாகவும் அறிவித்தார். அதேசமயம் மற்ற இந்திய வீரர்களான லக்ஷ்ய சென், ஆயுஷ் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி, மற்றும் தெரசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் உள்ளிட்டோர் முன்னதாகவே இங்கிலாந்து சென்றடைந்ததன் காரணமாக, இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்ஷயா சென், ஹாங்காங்கின் அன்கஸ் எங்கா லாங்கை எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷயா சென் 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் கம்பேக் கொடுத்த அன்கஸ் இரண்டாவது செட்டை 23-21 என்ற கணக்கில் போராடி வென்றார்.
இதனால் ஆட்டத்தின் முடிவு மூன்றாவது செட்டை நோக்கி நகர்ந்ததால், இதில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தன. பின்னர் மூன்றாவது செட்டிலும் தனது திறமையை வெளிப்படுத்திய லக்ஷயா சென் 21-10 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் லக்ஷயா சென் 21-19, 21-23, 21-10 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் அன்கஸ் எங்கா லாங்கை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
அதேசமயம் மற்றொரு இந்த வீரரான ஆயுஷ் ஷெட்டி ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தோனேசியாவின் அல்வி ஃபர்ஹானிடம் தோல்வியைத் தழுவினார். இந்த போட்டியில் ஆயுஷ் ஷெட்டி 21-19 என்ற கணக்கில் முதல் செட்டை வென்ற நிலையிலும், 09-21, 17-21 என்ற கணக்கில் அடுத்தடுத்த செட்களில் தோல்வியடைந்து முதல் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறி ஏமாற்றமளித்தார்.
இதுதவிர ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முதன்மை வீரர்களான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை 21-23, 12-21 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் ஏரோன் தாய் – காங் காய் ஷிங் ஜோடியிடம் தோல்வியடைந்து தொடரிலிருந்தும் வெளியேறியுள்ளனர். இந்நிலையில், தற்சமயம் காலிறுதிக்கு முன்னேறிய லக்ஷயா சென் பட்டம் வென்று சாதிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

