இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இதனை தொடர்ந்து இந்த உலகக்கோப்பையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சூப்பர் 8 சுற்றானது பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுவரை 7 அணிகள் இந்த சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
அதில் குரூப் ஏ-வில் இருந்து இந்தியாவும், குரூப் பி-யில் இருந்து இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளும், குரூப் சி பிரிவிலிருந்து இங்கிலாந்து மற்றும் வெஸ் இண்டீஸ் அணிகளும், குரூப் டி பிரிவிலிருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் சூப்பர் 8-க்கு முன்னேறியுள்ளனர். அதேசமயம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இதில் இன்றைய தினம் பாகிஸ்தான் அணி நமீபியாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். ஒருவேளை பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில் குரூப் ஏ பிரிவில் இந்தியாவை தொடர்ந்து அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் ஒன்றில் இந்தியாவுடன், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்துள்ளன. அதேசமயம் குரூப் இரண்டில் நியூசிலாந்து, இங்கிலாந்து இலங்கை மற்றும் பாகிஸ்தான் அல்லது அமெரிக்க அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 22ஆம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி அஹ்மதாபாத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வே அணியையும், கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸையும் இந்திய அணி எதிர்கொள்ளவுள்ளது.
போட்டி அட்டவணை
இந்தியா vs தென்னாப்பிரிக்கா – பிப்ரவரி 22 – அகமதாபாத்
இந்தியா vs ஜிம்பாப்வே – பிப்ரவரி 26 – சென்னை
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் – மார்ச் 1 – கொல்கத்தா
இதனால் டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியான வெற்றிகளை குவித்துவரும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சூப்பர் 8 சுற்றிலும் தமது ஆதிக்கத்தை தொடர்வதுடன் அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

