இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியால் தான் நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்தேன் என்று பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் கூறியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு தற்சமயம் 7 அணிகள் முன்னேறியுள்ளன. அதேசமயம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கான போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் உள்ளன.
இதில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி நமீபியாவுக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் அல்லது தோல்வியடைந்தால் தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த உலகக் கோப்பை தொடர் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் மிக முக்கியமானது பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு சர்ச்சை தான். ஏனெனில் அவர் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களை காட்டிலும் பந்தை ஒரு சில வினாடிகள் தாமதமாக விசுகிறார்.
இது பேட்டர்களுக்கு பெரும் சவாலாக இருந்ததுடன், சிலர் அவரது பந்துவீச்சு முறையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். இது உலக கிரிக்கெட் அரங்கில் பெரும் பேசுபொருளாக மாறி இருந்தது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சுக்கு அனுமதி வழங்கியது, அது ஐசிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் உள்ளது என்ற அறிவிப்பையும் கொடுத்தது.
இந்நிலையில், சமீபத்திய செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியால் தான் நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வந்தேன் என்று கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், “எம்.எஸ். தோனி திரைப்படத்தை பார்த்த பிறகு தான் நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். ஏனெனில் நானும் அவரை போலவே ஒரு வேலை செய்து கொண்டிருந்ததால், அவருடைய கதை என்னுடையதைப் போலவே இருந்தது. என்னைப் போலவே அவரும் ஒரு வேலையைச் செய்துகொண்டே கனவைத் துரத்தியதைப் பார்த்தபோது, என்னாலும் மீண்டும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,”உண்மையைச் சொன்னால், எனக்கென ஒரு பெயரை உருவாக்க இதை ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதினேன். நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன், ஆனால் தனிப்பட்ட முறையில், நான் இருக்க வேண்டிய அளவுக்கு முன்னேறவில்லை என்று நினைக்கிறேன். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், கடந்த ஆட்டத்தில் செய்ததை விட மிகச் சிறப்பாகச் செயல்படுவேன் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
பாகிஸ்தான் அணிக்காக கடந்த 2025ஆம் ஆண்டு அறிமுகமான உஸ்மான் தாரிக், இதுவரை 5 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி, அதில் ஒரு 4 விக்கெட் ஹால் உள்பட மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருடைய வித்தியாசமான பந்து வீச்சின் காரணமாக தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தவிர்க்க முடியாத பவுலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

