ஐசிசி ஆடவர் டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் ஏற்கெனவே குரூப் 2ல் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. அதேசமயம் குரூப் 1-ல் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், மீதமுள்ள இடத்திற்காக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.
அதன்படி, இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, இந்த உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. சூப்பர் 8-ன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி, அடுத்ததாக நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக டாப் ஆர்டரில் சஞ்சு சாம்சனி வருகை அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது. ஏனெனில் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், சஞ்சு சாம்சன் வருகை காரணமாக அது சரிசெய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் அக்ஸர் படேலும் பிளேயிங் லெவனில் இடம் பிடித்துள்ளது அணிக்கு மேலும் பலத்தை கொடுத்துள்ளது. இதனால் இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்த தொடரில் விளையாடி வருகிறது. அதற்கேற்றவாரே அந்த அணி விளையாடிய அனைத்து லீக் போட்டிகளிலும் அபாரமான வெற்றியை பதிவு செய்து அசத்தியதுடன், சூப்பர் 8-க்கு முன்னேறியது. இதில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்தது.
இதன் காரணமாக இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலைக்கு வெஸ்ட் இண்டீஸ் தள்ளப்பட்டுள்ளது. அணியின் பேட்டிங்கில் பிராண்டன் கிங், ஷிம்ரான் ஹெட்மையர், ஷெர்ஃபேன் ரதர்ஃபோட், ரோவ்மன் பாவெல் உள்ளிட்டோரும், பவுலிங்கில் ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், அகீல் ஹோசைன், மேத்யூ ஃபோர்ட் அகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையிலும் 30 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. அதில் இந்திய அணி 19 வெற்றிகளை பதிவு செய்து தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றியை பதிவு செய்து ஆதிக்கத்தை தொடருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம்
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம் பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக திகழ்கிறது. இங்கு இதுவரை 18 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 9 போட்டிகளிலும், சேஸிங் செய்த அணிகள் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் இந்த போட்டி இரவில் நடைபெறுவதன் காரணமாக, பனியின் தாக்கமும் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியை காண முடியும். இதில் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.

