அரசியல்உலகம்

இம்ரான் கான் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்.. என்னதான் நடக்கிறது பாகிஸ்தானில்!

பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான ஆட்சியே காரணம் என்றும் அவர் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த பிரச்சனையை பற்றி விவாதிக்க கடந்த ஞாயிறு அன்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது. நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பவாத் உசேன், எதிர்கட்சிகளின் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனை ஏற்ற பாகிஸ்தான் துணை சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்தார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற கூட்டத்தை கலைத்ததோடு இன்னும் 90 நாட்களில் தேர்வை நடத்த வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தார்.

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு !

பாகிஸ்தான் அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ரத்து செய்த சபா நாயகரின் உத்தரவை செல்லாது என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு தொடர்பான குடியரசுத் தலைவரின் உத்தரவையும் ரத்து செய்தனர். இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று கொண்டுவரப்பட உள்ளது.

தாக்குப் பிடிக்குமா இம்ரான் கானின் அரசு!

342 இடங்களை கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 172 எம்.பிக்களின் ஆதரவு இம்ரான் கானுக்கு தேவை. ஆனால், கூட்டணி கட்சிகளும், தெஹ்ரிக் கட்சிகளின் எம்.பிக்களுமே இம்ரான் கானுக்கு எதிராக உள்ளதால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவர் வெற்றிபெறுவதற்கான சாத்தியம் குறைவாகவே இருக்கிறது.இதற்கிடையே, இம்ரான் கான் வெள்ளிக்கிழமை தன் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பால் மிகுந்த மனவருத்தம் அடைந்ததாக தெரிவித்தார். பின்னர், நாட்டின் இறையாண்மையை காப்பாற்ற வீதியில் இறங்கி போராடுங்கள் என்றும் கூறினார். மேலும், இந்திய குறித்து பேசியபோது ‘இந்திய மக்கள் அவர்களது நாட்டை நினைத்து பெருமை கொள்ளவேண்டும். இந்தியாவில் யாராலும் அரசியல் குழப்பத்தை எளிதில் ஏற்படுத்த முடியாது, இந்தியர்கள் சுயமரியாதை உடையவர்கள்’ என்றும் கூறினார்.

 

 

Related posts