தேனி: தேனியில் கள்ளக்காதலை கண்டித்து காவல் துறையில் புகாரளித்த மனைவியை, கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக் காதல்
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே குப்பிநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமணன். 58 வயதான இவர் தச்சுத் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி ராஜாத்தி மற்றும் 3 பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த 49 வயதான பெண் ஒருவருடன் லட்சுமணனுக்கு கள்ளக் காதல் இருந்திருக்கிறது. மேலும் இருவரும் தேனியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்கள்.
போலீசில் புகார்
இந்நிலையில் தன் கணவரின் கள்ளக் காதலை பற்றி அறிந்து மனைவி ராஜாத்தி. இது குறித்து கணவர் லட்சுமணனிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு இருக்கிறார். கடந்த மாத இறுதியில் மனைவி ராஜாத்தி, தன் கணவர் மீது தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். நேற்று லட்சுமணன் அவரது கள்ளக் காதலி ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
கணவரின் கொடூர செயல்
இந்த நிலையில் லட்சுமணன் விசாரணைக்கு போகாமல், தன் வழக்கை திரும்ப பெறுமாறு மனைவி ராஜாத்தியை மிரட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த லட்சுமணன் ராஜாத்தியின் தலையில் கடுமையாக தாக்கி இருக்கிறார். மேலும் ராஜாத்தியின் கழுத்தை நெருக்கி கொலை செய்து இருக்கிறார்.
வழக்கு பதிவு
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இன்று மருத்துவமனைக்கு வந்த லட்சுமணன் – ராஜாத்தி தம்பதியினரின் பிள்ளைகள் தங்கள் தாயின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து இறந்த ராஜாத்தியின் மகன் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பெயரில் கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். மேலும் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.