கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல தடையில்லை என தமிழ்நாடு நாடு அரசு அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்துகிறார்.
அனுமதி மறுப்பு
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கள்ளக்குறிச்சி, களமருதூர் பகுதியில் ஹிஜாப் அணிந்துகொண்டு தேர்வெழுத சென்ற மாணவிகளுக்கு தேர்வறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதேபோல், கடந்த மாதம் சென்னை தம்பரத்திலுள்ள சங்கர வித்யாலயா பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்கு சென்றிருந்த பெண்ணின் ஹிஜாபை அகற்ற சொன்னது தேவையற்ற சலசலப்பை உருவாக்குகிறது.

சமத்துவமற்ற அணுகுமுறை
உடலில் பூணுல் அணிந்து செல்வதற்கும், நெற்றியில் திருநீறு பூசி செல்வதற்கும், கையில் கயிறு அணிந்து செல்வதற்கும், கழுத்தில் ருத்ராச்சக்கொட்டை அனைத்து செல்வதற்கும் எந்த தடையும் விதிக்காதபோது, இஸ்லாமியரின் ஹிஜாப் உடைக்கு மட்டும் தடை விதிப்பது எதனால்? எல்லா மதத்தவரும் தங்களுடைய மத கோட்பாடுகளை பின்பற்ற கல்விக்கூடங்களில் தடை விதிக்காத போது இஸ்லாமியர்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது சமத்துவமற்ற அணுகுமுறை இல்லையா?
ஓட்டு இனிக்கிறது; உரிமை கசக்கிறதா?
ஹிஜாப் அணிந்துகொண்டு தேர்வெழுத செல்வதற்கு மட்டும் தடை விதிப்பவர்கள், ஹிஜாப் அணிந்துகொண்டு வாக்களிக்கும் தருணம் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? அப்போது ஹிஜாப் உடை சிக்கலாக்கபடவில்லை, இப்போது மட்டும் கண்ணை உறுத்துகிறதா? இஸ்லாமியர்களின் வாக்கு இனிக்கிறது; அவர்களின் உரிமை கசக்கிறதா?

தமிழக அரசின் கடமை
அண்டை மாநிலமான கர்நாடகாவில் பாஜக போன்ற இந்துத்துவ இயக்கங்கள் பெரும் மதப்பூசலை உருவாக்கி, சமூக அமைதியை குலைத்து மதவெறியாக்கியதின் விளைவாக, 33,000 மாணவிகள் தேர்வெழுதாமல் போனது பெரும் அவலமான நிகழ்கால சாட்சியாக இருக்கும் நிலையில், இதுபோன்ற கோரச்சம்பவங்கள் தமிழகத்தில் நிகழாமல் தடுத்து மதவெறிகூட்டத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்கவேண்டியது தமிழக அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும்.
ஆகவே, தமிழக கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல எந்த வித தடையும் இல்லை என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

