ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 1,09,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு வார காலமாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. போரின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுபாட்டை சமாளிக்க, பல நாடுகள் தங்களிடம் இருந்த தங்கத்தை விற்க தொடங்கின. இதனால் சந்தையில் அதன் மவுசு குறையத் தொடங்கியது. அதன் எதிரொலியாக விலையும் குறைந்தது.
ஆனால், தங்கள் நாட்டை தாக்கும் நாடுகளை தவிர, மற்ற நாடுகளின் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று ஈரான் அறிவித்ததால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் எண்ணெய் மற்றும் எரிபொருளுடன் தங்கள் நாடுகளை நோக்கி சென்ற வண்ணம் உள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தின் மீது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டுவருகிறது.
தங்கம் விலை
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 25) கிராமுக்கு ரூ. 350 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 13,600க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 70 உயர்ந்து ரூ. 13,670க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 2,800 அதிகரித்து ரூ. 1,08,800க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 560 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 1,09,360க்கு விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையானது நேற்று கிராமுக்கு ரூ. 10 அதிகரித்து ரூ. 260க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையாகி வருகிறது. அதன்படி, இன்றும் ஒரு கிலோ வெள்ளியானது ரூ. 2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

