சமூகம்

ஹைதராபாத்தில் அரங்கேறிய ஆணவக்கொலை; கொலைக்கு காரணமான மத வெறி !

ஹைதராபாத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பத்தினரை 4 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து கணவனை மட்டும் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நட்பில் இருந்து காதல்

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான நாகராஜ் என்பவர். இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு கார் ஷோரூமில் சேல்ஸ் மெனாக பணியாற்றி வந்திருக்கிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சையது அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

பெயர்மாற்றம்

இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் இவர்களது காதலை கடுமையாக எதிர்த்துள்ளனர். இதனால், நாகராஜும் சுல்தானாவும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஹைதராபாத்தில் வீடு எடுத்து தங்கியுள்ளனர். அந்த பெண் தனது பெயரை பல்லவி என மாற்றியுள்ளார். பின்னர் இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

4 பேர் கொண்ட கும்பல்

சரூர்நகர் தாசில்தார் அலுவலகம் அருகில் இருவரும் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது,  4 பேர் கொண்ட கும்பல் இவர்களை வழி மறுத்துள்ளது. அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தி அரிவாளால் நாகராஜை சரமாரியாக வெட்டியது. சுல்தானாவின் உறவினர்கள்தான் நாகராஜை தாக்குகின்றனர் என்பதை அறிந்த சுல்தானா தன் கணவரை விட்டு விடும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் அந்த கும்பல் சுல்தானாவை கீழே தள்ளிவிட்டு நாகராஜை கொடூரமாக அடித்தே கொன்றது.

பொதுமக்கள் ஆவேசம்

அந்த கும்பலில் இருந்த நபர் ஒருவர் வெறி அடங்காமல் இரும்பு கம்பியால் நாகராஜின் சடலத்தை அடித்தார். இதனை சுல்தானா தடுக்க சென்ற போது அவரையும் அடிக்க கம்பியை ஓங்கினார். இதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் ஆவேசமாகி ஹெல்மெட்டால் அந்த கொலையாளியை தாக்கினர். பின்னர் அவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

முதற்கட்ட விசாரணை

இதனையடுத்து, போலீசார் நாகராஜின் உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கள் வீட்டு பெண்ணை வேறு மதத்தை சேர்ந்தவர் திருமணம் செய்துகொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாததால் நாகராஜை கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சுல்தானாவின் உறவினர் 4 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத குழுவினர் உள்ளனரா?

இந்த ஆணவக்கொலை விவகாரத்தை தெலங்கானா பாஜக கையில் எடுத்துள்ளது. இந்த விவாகரத்திற்கு பின்னர் பெண்ணின் உறவினர்கள் மட்டும் உள்ளனரா? இல்லை மத குழுவினரும் உள்ளனரா? என முழு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என பாஜக எம்எல்ஏ ராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

நீதி வேண்டும்

மனதை பதைக்கும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த சமூக வலைத்தளங்களில் #justicefornagaraju என்ற ஹாஸ்டேக்கை இளைஞர்கள் பலரும் பகிர்ந்துவருகின்றனர். நகராஜுவின் மரணத்திற்கு உரிய நீதி வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.