கோவையில் உணவக ஊழியரை அடித்துக் கொலை செய்த வழக்கில் ஐந்து திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழியர் அடித்துக் கொலை
கோவை மாவட்டம், பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (49). இவர் துடியலூர் அருகே உள்ள உணவகத்தில் சர்வர் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மலிங்கம், தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரத்தில் துடியலூர் அருகே சாலையில் நின்றுகொண்டிருந்தார். பின்னர் அங்கு ரேஸ்மிகா என்ற திருநங்கையிடம் பாலியல் உறவுக்காக சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது திருநங்கை ரேஸ்மிகாவுடன் தர்மலிங்கத்திற்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதைப் பார்த்த அருகில் இருந்த திருநங்கைகள் மம்தா, கௌதமி, ஹர்னிகா, ரூபி, கீர்த்தி உள்ளிட்டோர் சென்று இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளன. இதில் அடி தாங்க முடியாமல் தர்மலிங்கம் உடன் வந்த நண்பர் அங்கிருந்து ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், தர்மலிங்கம் கடுமையான தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த தர்மலிங்கத்தை, இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்துவிட்டதாகச் கூறி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் திருநங்கைகள் சேர்த்துள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரித்தபோது, தர்மலிங்கம் உண்மையைக் கூறியிருக்கிறார். போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே தர்மலிங்கம் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இது தொடர்பாக கொலைவழக்கு பதிவு செய்த துடியலூர் காவல்துறையினர், ஐந்து திருநங்கைகளையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கீர்த்தி என்ற திருநங்கையை தேடி வருகின்றனர்.

