ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி அறிவித்துள்ளார்.
கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல் தளத்தில் உள்ள ஐ.சி.யூ பிரிவில் இன்று (மார்ச் 16) அதிகாலை 02.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 10 பேர் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐசியூவில் இருந்த 10 நோயாளிகள், புதிய கட்டிடத்தில் உள்ள ஐ.சி.யூ. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையின் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறைச் செயலாளர், கட்டாக் மாவட்ட ஆட்சியர், கட்டாக் காவல்துறை துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்று ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், “தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்; அத்துடன், மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது. நோயாளிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் போது 11 மருத்துவமனை ஊழியர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது; இந்த தீ விபத்து குறித்து விசாரிப்பதற்காக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், மற்ற நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. அதிகாலையில் நிகழ்ந்த இந்த கோர சம்பவம், ஒடிசா மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

