சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனைகளில் ரூ. 4.09 கோடி மதிப்புடைய தங்கம், வெளிநாட்டு ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏர் இந்தியா பயணிகள் விமானம் துபாயிலிருந்து இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. விமான நிலைய சுங்கத்துறை ஏர்இண்டலிஜென்ட் அதிகாரிகள் பயணிகளை ரகசியமாக கண்காணித்ததில் சென்னையைச் சேர்ந்த சுமார் 28 வயது இளைஞர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் சுற்றுலா பயணிகள் விசாவில் துபாய் போய்விட்டு திரும்பியிருந்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
இதனால் சந்தேகம் வலுக்கவே, அதிகாரிகள் அவருடைய உடைமைகளை சோதித்துள்ளனர். ஆனால் அவற்றில் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழு பரிசோதனை மேற்கொண்டதில், அவருடைய உள்ளாடைக்குள் 3 உருளைகள் மறைத்து வைத்திருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. அவைகளை திறந்து பார்த்தபோது அவற்றில் 24 காரட் சுத்தமான தங்கப்பசை, 940 கிராம் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1.36 கோடியாகும்.

கடத்தி வரப்பட்ட தங்கப்பசை
இந்த கைது சம்பவத்திற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக, சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ள வந்த சென்னையைச் சேர்ந்த சுமார் 35 வயது பெண்மணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர் கையில் வைத்திருந்த பையை பரிசோதித்துள்ளனர்.

விமான நிலையத்தில் பிடிபட்ட வெளிநாட்டு பணம்
அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் யூரோ கரன்சிகள் இருந்தன. இதையடுத்து அந்த பெண் பயணியின் பயணத்தை ரத்து செய்து அவரை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர் பையிலிருந்து ரூ.2.73 கோடி மதிப்புடைய கடத்தல் பணத்தை பறிமுதல் செய்தனர்.
அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோதும், அவரும் கடத்தல் குருவி என்றும், வேறு யாரோ அவரிடம் பணத்தை கொடுத்து அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. எனவே அந்த பணமானது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ரூ.4.09 கோடி மதிப்புடைய தங்கம், வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

