கணவர் மனைவி தகராறில் 2 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றம் வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு கனகவல்லி என்பவருடன் திருமணமாகி ஸ்ரீகரண், ஸ்ரீஹரணி என இரண்டு குழந்தைகள் இருந்தன. இந்த நிலையில், கணவர் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2012 ஏப்ரல் 8 ஆம் தேதி காலையில் கனகவல்லி வீட்டிலிருந்த போது, ஆட்டோவில் வந்த திருப்பதி தனது இரண்டு குழந்தைகளையும் வெளியே அழைத்து சென்றுள்ளார். குழந்தைகளுடன் சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த கனகவல்லி அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். அப்போது அருகே இருந்த கிணற்றில் குழந்தைகள் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குழந்தைகள் மரணத்தில் சந்தேகமடைந்த தாய் காவல் நிலையத்தில் புகாரளித்தார். கனகவல்லி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த நாகமலை புதுக்கோட்டை போலீசார், அவரது கணவர் திருப்பதி, அவரது நண்பர் பெரிய கருப்பன் மற்றும் பிரேமலதா 3 ஆகிய பேரையும் கைது செய்தனர். பின்னர், இவ்வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம், திருப்பதி, பிரேமலதா மற்றும் பெரிய கருப்பன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதற்கிடையே, வழக்கு விசாரணையின் போது திருப்பதி இறந்துவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து பிரேமலதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன் மற்றும் ஆர்.பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் மீனாட்சி சுந்தரம், “கீழமை நீதிமன்றம் விசாரணை செய்து உரிய சாட்சியங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆகையால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதாடினார்.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம், மருத்துவ பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்யவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைகளின் உடலில் நீர் எதுவும் இல்லை என்பதும், அவர்கள் கிணற்றில் வீசப்படுவதற்கு முன்பே மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது” என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், குழந்தைகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் நீரில் மூழ்கி இறந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அவர்களது குடல் மற்றும் நுரையீரலில் தண்ணீர் இருந்ததாகவும் மருத்துவச்சான்று இல்லை. எனவே, அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்க தவறியதால், விசாரணை நீதிமன்றம் பிரேமலதா மற்றும் பெரியகருப்பனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

