Editor's Picksஅரசியல்இந்தியா

மத வெறுப்பு பேச்சுக்கு தெறிக்கும் கண்டனங்கள் ! மறுக்கும் வெளியுறவுத் துறை !

நபிகள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்ட இசுலாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்புக்கு இந்திய வெளியுறவுத்துறை பதில்.

நுபுர் சர்மா

Nupur Sharma

பாஜக செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா ஞான்வாபி மசூதி குறித்த விவாத நிகழ்ச்சியில் இறைத் தூதர் நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார். இதைத் தொடர்ந்து அவர் பாஜகவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக பேசிய டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் நவீன் ஜிண்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

வளைகுடா நாடுகளின் கண்டனங்கள்

Nupur Sharma & Naveen Jindal

இதற்கு வளைகுடா நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘முற்றிலும் நிராகரிப்பு மற்றும் கண்டனம், இந்திய அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ என அதிகாரப்பூர்வ குறிப்பை இந்தியத் தூதர் தீபக் மிட்டலிடம் கத்தார் வெளியுறவுத்துறை அளித்துள்ளது. அது மட்டுமின்றி இந்தியப் பொருட்களை புறக்கணிப்பதாக கத்தார் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்ரைன், சவுதி அரேபியா, ஈரான், குவைத் போன்ற நாடுகளும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

இஸ்லாமியக் கூட்டமைப்புக்கு வெளியுறவுத்துறை கண்டனம்

‘இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பும்’ (OIC) தனது கண்டனங்களை அறிக்கை வாயிலாக தெரிவித்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் திரு.அரிந்தம் பக்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘OIC செயலகத்தின் தேவையற்ற மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை இந்திய அரசு திட்டவட்டமாக நிராகரிக்கிறது. இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் உயர்ந்த மரியாதை அளிக்கிறது. ஒரு மத ஆளுமையை இழிவுபடுத்தும் புண்படுத்தும் கீற்றுகள் மற்றும் கருத்துக்கள் சில நபர்களால் செய்யப்பட்டன. அவை எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. இந்த நபர்கள் மீது சம்பந்தப்பட்ட அமைப்புகளால் ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் OIC செயலகம் தன்முனைப்பாக தவறாக வழிநடத்தும் மற்றும் குறும்புத்தனமான கருத்துக்களை வெளியிடத் தேர்ந்தெடுத்துள்ளது வருத்தமளிக்கிறது. இது அவர்களின் இந்திய சமூகத்தை மத ரீதியாக பிளவுபடுத்தும் நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது.

OIC செயலகம் அதன் வகுப்புவாத அணுகுமுறையை நிறுத்த வேண்டும். அனைத்து நம்பிக்கைகள் மற்றும் மதங்களுக்கும் உரிய மரியாதையைக் காட்டுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்’ என கூறப்பட்டுள்ளது.

Related posts