கடலூர் தனியார் கல்லூரி கழிப்பறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகாம் மாணவி
விழுப்புரம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகலிங்கம். இவரது மகள் தனலட்சுமி (19) கடலூர் செம்மண்டலம் பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.
துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை
விடுதியில் தங்கி படித்துவந்திருந்த தனலட்சுமி இன்று காலை கல்லூரி கழிப்பறையில் துப்பட்டாவில் தூக்கிட்டபடி தற்கொலை செய்துகொண்டார். கழிப்பறைக்கு வந்த சக மாணவிகள் தனலட்சுமியின் சடலத்தை பார்த்து பயந்து ஓடியிருக்கின்றனர். கழிப்பறையில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவிகள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை
இதனையடுத்து அங்கு திரண்ட பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் நடந்த சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் தனலட்சுமி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
உருக்கமான கடிதம்
மாணவி தனலட்சுமி இறப்பதற்கு முன் உருக்கமாக எழுதிய கடிதத்தில் ‘தம்பி சக்தி நல்லா படி. அப்பா அம்மாவை நல்லா பாத்துக்கோ. யாரையும் நம்பாதீங்க. இது போலியான உலகம். நான் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேனோனு பயமா இருக்கு. என் அக்கவுண்டில் 6000 ரூபாய் இருக்கு. எடுத்து வாட்ச் வாங்கிக்கோடா. அப்பா அம்மாவை எதிர்த்து பேச கூடாது. இதை படிச்சிட்டு லெட்டரை கிழித்து போட்டுவிடு’ என எழுதியுள்ளார்.
இந்த மாணவியின் இந்த திடீர் தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.