தமிழ்நாடு

தஞ்சையில் தேர் விபத்து;11 பேர் பலி – முதல்வர் நேரில் சென்று அஞ்சலி!

தஞ்சாவூர்: தஞ்சையில் உயர்மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த நிலையில்,  உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளோரையும் சந்தித்து நலம் விசாரிக்கிறார்.

தஞ்சாவூர் – பூதலூர் சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது.

இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன்படி 94ம் ஆண்டான இந்த வருடத்திற்குகான மூன்று நாள் அப்பர் சதய விழா நேற்று (ஏப்.26) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து தேர் இழுத்து வரப்பட்டது.

தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம் வைத்து படையல் செய்து வழிபட்டனர். புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது.

இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது, 11 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 14 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தஞ்சை சென்று, மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளோரை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கிறார். உயிரிழந்தோரின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

விபத்தில் உயிரிழந்தோரின் குடுமபங்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

Related posts