அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக 2,642 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வன்முறை
அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது நாடு முழுவதும் நடந்த போராட்டத்தில் அரசுக்கு சொந்தமான பொருட்கள், மற்றும் ரயில்கள் கொளுத்தப்பட்டன. வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ரெயில்வே சொத்துக்களின் சேதம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் அளித்த பதிலில், மத்திய ரெயில்வே, கிழக்கு ரெயில்வே மற்றும் தென்னக ரெயில்வே என 12 மண்டலங்களில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியதாக 2,642 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இக்கைதில் அதிகபட்சமாக தென்னக ரெயில்வேயில் மட்டும் 1,051 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வன்முறை போராட்டத்தில் 2 நபர்கள் உயிரிழந்ததாகவும், 35 நபர்கள் காயமடைந்ததாகவும் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்னவ் மாநிலங்களவையில் பதில் கூறினார்.

