சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பிலான பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீசார் மற்றும் ரயில் பாதுகாப்பு படை போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (RPF) அதிகாரிகள் சோதனை நடத்தியபோது கணக்கில் வராத பணம், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட ரூ.1.25 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பெங்களூரு நகரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த எண் 12608 கொண்ட எக்ஸ்பிரஸ் ரயில் 10-வது தளத்தில் நின்றபோது RPF அதிகாரிகள் ரயிலில் ஏறி சோதனை மேற்கொண்டனர். அப்போது கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் KGF பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (56) என்பவர் பங்கார்பேட்டிலிருந்து சென்னைக்கு பயணம் செய்திருந்தார். அவரிடம் சோதனை செய்தபோது 288 கிராம் எடையுள்ள 4 தங்க கட்டிகள் (மதிப்பு சுமார் ரூ.47 லட்சத்து 52 ஆயிரம்) மற்றும் 10 கிலோ எடையுள்ள ஒரு வெள்ளி கட்டி (மதிப்பு சுமார் ரூ.29 லட்சத்து 40 ஆயிரம்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தமாக ரூ.76. 92 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி இருந்த நிலையில், அதற்கான ஆவணங்களை அவர் சமர்ப்பிக்க முடியாததால் அவரை பிடித்து வருமான வரித்துறை விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த 12711 எக்ஸ்பிரஸ் ரயிலில் RPF அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது D-5 பெட்டியில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (23) என்பவரிடம் ரூ.48.59 லட்சம் கணக்கில் வராத பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான உரிய ஆவணங்களை அவர் வழங்க முடியாததால், பணத்துடன் அவரும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு ரயில் நிலையங்களில் இத்தகைய சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

