“நல்லகண்ணுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைப்போம்” என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
நல்லகண்ணு மறைவு செய்தி அறிந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சென்னை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து அஞ்சலி செலுத்தினர். அந்தவகையில், பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அங்கு அவரது குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், “நல்லகண்ணுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைப்போம்” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்ததாவது; “ஐயா நல்லகண்ணு, நம்மிடத்தில் இல்லை என்பது நம்ப முடியாத ஒன்று. ஏழை எளிய மக்களிடத்தில் அவர் காட்டிய பரிவு, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக தன்னுடைய முழு வாழ்க்கையும் அர்ப்பணித்தவர்.
அடித்தட்டு மக்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்ட ஒரு தலைசிறந்த நபர். இன்றைய இளைஞர்களுக்கும் கூட எடுத்துக்காட்டான தலைவராக இருந்திருக்கிறார்.
ஒரு சராசரி மனிதன் அரசியலில் எவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்தாலும்கூட இன்றைக்கும் அவருக்கென ஒரு சொந்த வீடு கூட வைத்து கொள்ளாத ஒரு அரிய தலைவரை தமிழகம் பெற்றிருந்திருக்கிறது.
அப்படிப்பட்ட தலைவரின் மறைவு நம்மை எல்லாம் மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரது குடும்பத்தினருடனும், கம்யூனிஸ்ட் கட்சியினருடனும் இந்த துயரத்தைப் பகிர்ந்து கொள்வோம். நல்லகண்ணுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிடம் பரிந்துரைப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

