அறிவியல்

நவீன அறிவியல் அற்புதங்கள் – சாகாவரம் இனி சாத்தியம்

மனித இனம் இந்த மண்ணில் தோன்றி 5 லட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன. வேட்டையாடி உண்டு திரிந்த காலம் முதல் போர்க்களத்தில் தன்னுயிர் ஈந்து, முடியாட்சியை தக்கவைக்க முயன்ற காலம் வரை மனிதனின் ஆயுட்காலம் என்பது உறுதியாக வரையறுத்து கூறத்தக்கதாக இருந்ததில்லை. காலங்கள் மாறி, காட்சிகளும் மாற தொடங்கிய பின்னர், உணவு பழக்கங்கள், நாள்தோறும் செய்யும் வேலைகள், சுற்றுசூழல், என பல்வேறு காரணிகளால் மனிதனின் ஆயுட்காலம் சற்று அதிகரிக்க தொடங்கியது .

ஆசை யாரை விட்டது?  20 ஆம் நூற்றாண்டு…. நிறைய பணம், நிறைய புகழ் என்று நிறைய நிறைய கேட்கும் மனித மனம், தன்னுடைய ஆயுட்காலத்தையும்   நிறைய வேண்டும் என கேட்க தொடங்கிய கால கட்டம். நவீன அறிவியலும் அந்த ஆசையை பூர்த்தி செய்ய தன்னால் இயன்றதை செய்வதாக ஒப்புக்கொண்ட கால கட்டம் .

1962  ஆம் ஆண்டு. மனித ஆயுளை நீட்டிக்கும் மந்திரம் தன்னிடம் இருப்பதாக  மார்தட்டி சொன்னார் அமெரிக்க இயற்பியல் பேராசிரியர் ராபர்ட் எட்டிங்கர் (Robert Ettinger). அறிவியல் உலகம், அவருடைய பேச்சுக்கு மெல்ல மெல்ல செவி சாய்க்க துவங்கியது. மனிதனின் இறப்புக்கு பின் சில மணி நேரங்கள் வரை நமது மூளை செயல்படும். உடம்பில் உள்ள எல்லா பாகங்களும் செயல் இழந்து போன பின்பும் மூளையில் மட்டும் சிறிதளவு ரத்த ஓட்டமும், நியூரோன்ஸ் எனப்படும் மூளை நரம்புகளில், இறப்பதற்கு முன்பு வரை நாம் கண்ட காட்சிகள், கேட்ட ஒலிகள் என அனைத்தும் பதிவாகி இருக்கும். மூளை மட்டும் உயிரோடு இருக்கும் இந்த நிலையில் ஒரு மனித உடலை, அதீதமாக குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டியில் அடைத்து வைத்தால். அந்த நரம்புகளில் பயணிக்கும் மின்னாற்றல் அப்படியே உறைந்து போயி நின்று விடும். இந்த சிறிய துருப்புசீட்டை வைத்து ஒரு அறிவியல் ஆட்டம் ஆட எத்தனித்தார் எட்டிங்கர்.

1976 இல் Cryonics Institute என்ற நிறுவனத்தை துவங்கினார். இறந்தவர்களின் உடல்களை −130 °சி டிகிரி குளிரில் பதப்படுத்தி பல ஆண்டுகள் கழித்து அவற்றை இயல்பு நிலைக்கு வரவழைத்து, உயிர்ப்பிக்க முடியும் என்று தெரிவித்தார் எட்டிங்கர். வருங்காலத்தில் அறிவியல் தொழில்நுட்பம் நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வளர்ந்து விடும். இறந்த உடல்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பமும் வந்துவிடும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் துவங்கப்பட்ட இந்த Cryonics நிறுவனத்தில், தங்களது உடல்களை பதிவு செய்ய பலரும் முன் வந்தனர். குளிர் அதிகமாகி உடல் ஐஸ் கட்டியாக மாறி, எளிதாக  உடையும் தன்மைக்கு வந்துவிடும். ஆனால் உடையாமல் பாதுகாக்க Cryoprotectants எனும் வேதிப்பொருள் கலவையும் உடலை சுற்றி வைக்கப்படும்.

இன்றளவும் இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் 2014 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி  இது வரை 250 க்கும் மேற்பட்ட உடல்கள் பதப்படுத்த பட்டு வருகின்றன. மேலும் 1500 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தங்கள் இறப்புக்கு பின்னர் தங்களுடைய உடலையும் பதப்படுத்த விண்ணப்பித்து காத்து கிடக்கிறார்கள். ஒரு உடலை பதப்படுத்தி  பாதுக்காக்க கிட்ட தட்ட 2  லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை விலையாக நிர்ணயித்துள்ளது அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகாணத்தில்  செயல்பட்டுவரும் Cryonics Institute நிறுவனம். இந்திய நாட்டின் பணமதிப்பின்படி இது சுமார் ஒன்றரை கோடி ரூபாயாகும்.

மரணம் என்பது இயற்கை தரும் ஒரு அற்புத பரிசு. ஏன் பிறந்தோம்? எதற்காக வாழ்கிறோம்? இந்த வாழ்வின் பொருள் தான் என்ன? என்று நித்தமும் குழம்பி தவிக்கும் நமக்கு இயற்கை தரும் ஓய்வு தான் மரணம். அந்த ஓய்வையும் களைத்து,மரணத்தை வெல்லுமா அறிவியல்?? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 

Related posts