1982 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் மன்றம், United Nations Convention on the Law of the Sea என்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்புதான், உலக நாடுகளின் கடல் எல்லைகளை வரையறுத்தது. இவர்கள் வரைந்த ஒப்பந்தத்தில், இதுவரையிலும், 158 நாடுகள் கையெழுத்து இட்டு உள்ளன.
கடலில், மூன்று வகையான எல்லைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன.
கரையில் இருந்து ஆறு நாட்டிகல் மைல் தொலைவுக்கு உட்பட்டது ‘கரைக்கடல்.’ இதில் கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்கலாம்.
அடுத்த ஆறு நாட்டிகல் மைல், ‘அண்மைக் கடல்.’ இதில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அதன்பின் உள்ளதுதான் ‘ஆழிக்கடல்.’ இதில் கப்பல்களில் மீன் பிடிக்கலாம்.
இப்போது கரை ஓரங்களில் மீன்வளம் குறைந்து விட்டது. எனவேதான், கட்டு மர மீனவர்கள், அண்மைக்கடலுக்கும், ஆழிக்கடலுக்கும் செல்லுகிறார்கள்.
ஒரு நாட்டின் கடல் எல்லையான 12 நாட்டிகல் மைல் என்பது, தோராயமாக 22.2 கிலோ மீட்டர்கள் ஆகும்.
அந்த எல்லைக்கு உள்ளே, பயணிகள் கப்பல் போகலாம். ஆனால், மீன்பிடிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், வணிகக் கப்பல்கள் செல்வதற்கு, அந்த நாட்டின் கடலோரக் காவல்படையின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
மீன்பிடி படகுகளில், மரக்கலங்களில், கப்பல்களில் அந்தந்த நாட்டின் தேசியக் கொடிகள் பறக்க வேண்டும்.
18 ஆம் நூற்றாண்டில் இருந்து 20 ஆம் நூற்றாண்டு வரையிலும், ஒரு நாட்டின் கடல் எல்லை, ஆறு கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருந்தது. ஏனெனில், அப்போது இருந்த பீரங்கிகள் வீசுகின்ற குண்டுகள், ஆறு கிலோ மீட்டருக்கு மேல் பாயாது.
எனவேதான், அத்தகைய கட்டுப்பாடு. ஆனால், இப்போது, கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுகணைகள் வந்து விட்டன.
இப்போதும், சிங்கப்பூர், ஜோர்டான் போன்ற நாடுகள், தங்களுடைய கடல் எல்லையை, 6 கிலோ மீட்டர்கள் என்ற அளவிலேயே நிறுத்திக் கொண்டு உள்ளன.
கடலோரக் காவல்படையினர், ஒரு நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால், மேலும், 22 கிலோ மீட்டர் தொலைவுக்கும் சென்று, கண்காணிப்பு, காவல் பணிகளில் ஈடுபடலாம். அதற்கு மேல், ‘பொருளாதார எல்லை’ என்று ஒன்று உள்ளது.
அதன்படி, சுமார் 393 கிலோ மீட்டர் வரையிலும் கடலில் உள்ள எல்லா வளங்களும், அதற்கு அருகில் கரையைக் கொண்டு உள்ள நாட்டுக்கே சொந்தம் ஆகும்.
மீன் பிடிப்பது, பெட்ரோல் எடுப்பது போன்ற உரிமைகளை அந்த நாடு கொண்டு உள்ளது.