வணிகம்

ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் உரிமை யாரிடம் உள்ளது?

1934 க்கு முன்பாக பணம் அச்சடிக்கும் அதிகாரம் முற்றிலுமாக மைய அரசையே சார்ந்திருந்தது . 1934 இல் இயற்றப்பட்ட ரிசர்வ் வங்கி (Section 22 in The Reserve Bank of India Act, 1934) சட்டப்படி பணம் அச்சடிக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது .

வெறும் பணம் அச்சடிப்பதோடு முடிந்துவிடுவதல்ல ரிசர்வ் வங்கியின் அதிகாரம் , அச்சடிக்கப்படும் பணத்தினை புழக்கத்தில் விடுவது மற்றும் நாட்டில் வங்கி உள்ளிட்ட அமைப்புகளை கண்காணித்து ஸ்திரத்தன்மையினை உறுதி செய்வதும் ரிசர்வ் வங்கியின் தலையாய கடமைகள் .

ரிசர்வ் வங்கி பணம் அச்சடிப்பதற்கான நிலையங்களை தேவாஸ் , மைசூர் , சல்போனி போன்ற இடங்களில் வைத்திருக்கின்றது .

அரசியல் சட்டப்படி இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கியிடம் இருந்தாலும் சில முடிவுகளை எடுப்பதில் மத்திய அரசின் பங்களிப்பும் இருக்கத்தான் செய்கின்றது .

உதாரணத்திற்கு எந்த மதிப்பிலான ரூபாய் நோட்டினை அச்சடிக்க வேண்டும் , என்ன மாதிரியான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட ரூபாய் நோட்டினை அச்சடிக்க வேண்டும் என்பது போன்ற விசயங்களில் மத்திய அரசே முடிவெடுக்கின்றன.

பணம் அச்சடிப்பதற்கு முன்பாக ரிசர்வ் வங்கியானது எழுத்துப்பூர்வமாக மத்திய அரசிடம் ஒப்புதலை பெறவேண்டும் . ஒப்புதலை பெற்ற பிறகு அச்சடிக்க துவங்கலாம்.

தற்போதைய நிலவரப்படி ரிசர்வ் வங்கியால் 10000 ரூபாய் நோட்டுவரை அச்சடிக்கலாம் . அதற்குமேல் அச்சடிக்கவேண்டுமெனில் ரிசர்வ் வங்கி சட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது கட்டாயம்.

ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் உரிமை எப்படி ரிசர்வ் வங்கியிடம் இருக்கின்றதோ அதனைப்போலவே நாணயங்கள் அச்சடிக்கும் அதிகாரம் முற்றிலுமாக மத்திய அரசிடமே இருக்கின்றது .

நாணயங்களை அச்சடிக்க கொல்கத்தா , உத்திரபிரதேசத்தில் தலா ஒரு இடமும் , ஹைதராபாத்தில் இரண்டு இடமும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகிறது .

நாணயங்களை அச்சடிப்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ரிசர்வ் வங்கிதான் நாணயங்களையும் புழக்கத்தில் விடுகின்றது .

Related posts