ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரின் 19ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டியில் சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கடந்தாண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியும், கோப்பையை தவறவிட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த முறை முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்த சீசனை எதிர்கொள்ள இருக்கிறது. அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங்,ஸ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஷஷாங்க் சிங், மிட்செல் ஓவன், முஷீர் கான் என அதிரடி வீரர்கள் உள்ளனர்.
மறுபக்கம் அணியின் பவுலிங்கை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சில் மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், லோக்கி ஃபெர்குசன், சேவியர் பார்ட்லெட், வைஷாக் விஜயகுமார் ஆகியோரும், சுழற்பந்து வீச்சில் யுஸ்வேந்திர சஹால், ஹர்ப்ரீத் பிரார், கூப்பர் கானொலி, சுர்யன்ஷ் ஷெட்ஜ் உள்ளிட்டோரும் உள்ளனர். இதனால் இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணியானது வலுவான கூட்டணியுடன் இந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ்
மறுபக்கம் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் கனவுடன் இந்த தொடரை எதிர்கொள்கிறது. அணியின் பேட்டிங்கில் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர், கிளென் பிலீப்ஸ், ராகுல் திவேத்தியா, ஷாரூக் கான், டாம் பாண்டன், ஜேசன் ஹோல்டர் என நட்சத்திர வீரர்கள் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் அணியின் பவுலிங்கை பொறுத்தவரையில் சுழற்பந்து வீச்சை ரஷித் கானும், வேகப்பந்து வீச்சை காகிசோ ரபாடாவும் வழிநடத்தவுள்ளனர். அவர்களுடன் லுக் முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா, லூக் வுட், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ் ஆகியோரும் உள்ளனர். இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஐபிஎல் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இரு அணிகளும் தலா 3 வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன.
மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம்
முல்லன்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்குமே சமமான வாய்ப்புகளை வழங்கும் ஒரு சமநிலையான ஆடுகளமாக இருந்துள்ளது. இங்கு இதுவரை 11 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 6 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றியை பதிவு செய்துள்ளன. அதேசமயம் இரவு நேரங்களில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேரலை தகவல்கள்
ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்பு செய்கிறது. அதே போல் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் இந்த போட்டியை காண முடியும். இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு இரவு 7 மணிக்கு நடைபெறும்.
பஞ்சாப் கிங்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், நேஹல் வதேரா, அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஷஷாங்க் சிங், மிட்செல் ஓவன், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல். (இம்பேக்ட் வீரர் – ஹர்ப்ரீத் பிரார்)
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், கிளென் பிலிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.(இம்பேக்ட் வீரர் – சாய் கிஷோர்).

