தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ராஜபாளையம் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிரிசில்லா ஜான்பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (மார்ச் 30) தொடங்குகிறது. இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த தொகுதியின் வேட்பாளராக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியனின் மனைவி பிரிசில்லா ஜான்பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன், “தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் எனது மனைவியும், கட்சியின் பொதுச்செயலாளருமான வழக்கறிஞர் பிரிசில்லா ஜான்பாண்டியன் போட்டியிடுகிறார்.
ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஓராண்டாகவே தீவிர களப்பணி ஆற்றி வருகிறோம். அங்கு பிரதான பிரச்சனையாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளியவர்களுக்கு ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அவை அனைத்திற்கும் தீர்வு காணப்படும். இன்று மாலையே ராஜபாளையத்தில் முகாமிட்டு களப்பணியைத் தொடங்க உள்ளோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்த கூட்டணியின் தலைவரான எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் அரியணையில் அமர வைப்போம்.
எங்களது வேட்பாளர் சாதி, மதம், பேதமின்றி அனைத்து சமுதாய மக்களுக்கும் சேவை செய்வார். தொழிலாளர்கள் நிறைந்த அந்த பகுதியில் அவர்களது வாழ்வு மேம்பட கடினமாக உழைப்பார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து அதனை தடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

