பண்டிகைக் கால விடுமுறை நாட்களில் மாநகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் உற்சவம் வாடிக்கையாக நடக்கும் ஒன்று. இதுபோன்ற சமயங்களில் பல லட்சம் பேர் ஒரே நாளில் பயணம்செய்ய வேண்டிஇருப்பதால் பேருந்து நிலையங்கள் பிதுங்கி வழியும். முண்டியடித்துக்கொண்டு பேருந்தில் கூட்டம் ஏறும். பேருந்து கிடைக்காமல் ஒருநாள் கழித்து வீடு சென்று சேர்ந்தவர்கள் கதைகள் பல உண்டு.
இவ்வாறான நிகழ்வுகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெறுவது வாடிக்கையிலும் வாடிக்கை. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பண்டிகைக் காலங்களில் தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கினாலும் அது போதுமானதாக இல்லை. ரயிலில் பயணம் செய்வதிலும் பல சிரமங்கள் இருந்து வருகிறது. முன்கூட்டியே டிக்கெட் தீர்ந்து விடுகிறது. நேரம் பொருந்தி வரவில்லை. எல்லா ஊர்க்காரர்களும் பயன்படுத்த முடிவதில்லை.
இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்டுத்திக்கொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள், சட்டவிரோதமாக இரண்டு மூன்று மடங்கு டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ளையடித்து வருகின்றனர். பல வருடமாக இது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. வேறு வழியின்றி மக்களும் பயணம் செய்துதான் வருகிறார்கள்.
இதுகுறித்து வெளிப்படையாக பயணிகள் சமூகவலையத்தளங்களில் பேசி பகிர்ந்து வந்தனர். இரண்டு மூன்று மடங்கு அதிக பணம் கொடுத்து பயணிப்பது சிரமாக இருப்பதாகவும், இதனால் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் குறைவதாகவும் கூறினர்.
சொந்த ஊருக்கு சென்று திரும்பும்போதும் இதுபோன்றச் சிரமங்கள் இருப்பதாகக் கூறினர். இதில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். ஆனால், இதுகுறித்து அரசு நிர்வாகிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வழக்கம்போல் மௌனத்தைக் கடைப்பிடித்தனர்.
இந்நிலையில், புதிதாகப் போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருப்பவர் எஸ்.எஸ் சிவசங்கர். போக்குவரத்து துறையில் பல மாற்றங்களைச் செய்துவரும் இவர், இந்த பிரச்சனையையும் கையில் எடுத்திருக்கிறார்.
தமிழ் வருடப்பிறப்பை ஒட்டி நான்கு நாள் தொடர் விடுமுறை கிடைக்க, வழக்கம்போல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தங்கள் வாடிக்கைப்படி நடந்துக்கொண்டனர். அப்போது அங்கு திடீர் விசிட்டாக வந்த அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பயணிகளிடம் நேரடியாக கலந்து பேசினார். அதிக கட்டணங்கள் வசூலித்த ஆம்னி பஸ்களை எச்சரித்து, அபராதம் விதித்தார்.
அமைச்சரே நேரடியாக பேருந்து நிலையத்துக்கு வந்தது, ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்தது. அமைச்சரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.