அரக்கோணம் அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.66 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் கண்காணிப்பு குழு நடவடிக்கை மேற்கொண்டது.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவும் – பகலுமாக வாகன சோதனை நடத்தி வருகின்றன. இந்த சோதனையில் இதுவரை பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தங்கம், வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களுக்கு முறையான ஆவணங்களை சமர்ப்பித்தால், அவை திருப்பி வழங்கப்பட்டு விடும். ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகையை கொண்டு சென்றால், அதற்கான ஆவணத்தை வைத்திருக்குமாறு தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தேர்தல் அதிகாரிகளின் இந்த சோதனையால், வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் சுழற்சி முறையில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
அதன் ஒருபகுதியாக, அரக்கோணம் அருகில் உள்ள புது கேசாவரம் சோதனைச்சாவடியில் நிலைக் கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், அந்த வாகனத்தில் பயணம் செய்தவர்களிடம் ரூ.1,66,620 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, அந்த பணத்தை எடுத்துச் செல்வதற்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளின்படி, அந்த பணத்தை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து, அரக்கோணம் தேர்தல் அலுவலரும் கோட்டாட்சியருமான ரமேஷிடம் ஒப்படைத்தனர். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் வியாபார நோக்கத்திற்காக பணத்தை எடுத்துச் சென்றதாக தெரிவித்திருந்தாலும், அதற்கான போதிய ஆவணங்கள் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தல் காலத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை தடுக்க, இந்த மாதிரியான சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், பொதுமக்கள் அதிக அளவு பணத்தை எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

