பாலுக்காக அழுத 6 மாதம் பெண் குழந்தையைப் பெற்ற தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தான் குழந்தையை கொலை செய்ததை அவரே தனது கணவருக்கு போன் செய்து கூறியுள்ளார்.
திருப்பதி மாவட்டத்தில் சத்யவேது மண்டலத்திற்குட்பட்ட என்.ஆர். அக்ரஹாரம் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் வெங்கடேஷ் – ஹேமாவதி தம்பதியினர். தமிழ்நாட்டில் இருந்து பணிக்காக 7 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் குடியேறிய இவர்கள், வாடகை வீட்டில் 5 வயது ஆண் குழந்தை மற்றும் 6 மாத பெண் குழந்தையுடன் வசித்து வந்தனர்.
வெங்கடேஷ் அருகில் உள்ள கோமதிகுண்டாவில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். மனைவி ஹேமாவதி, வீட்டில் இருந்தபடி குழந்தைகளை பார்த்துக்கொண்டு வந்தார்.
இந்நிலையில், காலை 6.30 மணியளவில் வழக்கம்போல் வேலைக்கு வெங்கடேஷ் புறப்பட்டுள்ளார். அப்போது, குழந்தை பசியில் அழுதுள்ளது. இதையடுத்து, மனைவியை எழுப்பி குழந்தைக்கு பால் கொடுக்க சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து, ஒன்றரை மணி நேரம் கழித்து மனைவியிடம் இருந்து வெங்கடேஷுக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அப்போது, “குழந்தை அழுது கொண்டே இருந்தததால் கோபத்தில் கொன்றுவிட்டேன்” என வெங்கடேஷிடம் அவரது மனைவி கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ், பயத்தில் உடனே வீட்டிற்குச் சென்று பார்த்தார். அப்போது குழந்தை மூச்சுப்பேச்சு இல்லாமல் இறந்து கிடந்ததது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு வெங்கடேஷ் தகவல் கொடுத்தார். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஹேமாவதியை கைது செய்தனர்.
முன்னதாக, ஹேமாவதி கணவரிடம் போனில் பேசிய போது, “குழந்தை பசியால் அழுதுகொண்டே இருந்தது. நான் கோபத்தில் குழந்தையைக் கொன்று விட்டேன். இது எனக்கு நல்ல செய்தி, உனக்குக் கெட்ட செய்தி” என அவர் கூறியதாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பசியால் பாலுக்கு அழுத பச்சிளம் குழந்தையை, பெற்ற தாயே சிறிதும் மனசாட்சி இல்லாமல் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

