ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை ஆதித்யா பிர்லா குழுமம் பெருந்தொகைக்கு வாங்கி வரலாறு படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மைல்கல் ஒப்பந்தமாக ஆர்சிபி அணியை ரூ.16,706 கோடிக்கு ஆதித்யா பிர்லா குழுமம் வாங்கியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பல்துறை சார்ந்த அமைப்புகள் ஏலத்தில் கூட்டாக வாங்கியுள்ளன. இந்த கூட்டமைப்பிற்கு குமார் மங்கலம் பிர்லாவை தலைவராக கொண்ட ஆதித்யா பிர்லா குழுமம் தலைமை வகிக்கிறது. இந்த கூட்டமைப்பில் பங்குதாரர்களாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (TOI), அமெரிக்க நாட்டின் தொழிலதிபர் டேவிட் பிளிட்சர் தலைமையிலான போல்ட் வென்ச்சர்ஸ் (Bolt Ventures), மற்றும் உலகளாவிய தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோன் (Blackstone) ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய உரிமையாளர்கள் கட்டமைப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆதித்யா பிர்லா குழுமத்தின் இயக்குநருமான ஆர்யமன் விக்ரம் பிர்லா தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அதேபோல் டைம்ஸ் இன்டர்நெட் அமைப்பின் தலைவரான சத்யன் கஜ்வானி ஆர்சிபி அணிக்கு துணைத் தலைவர் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த ஒப்பந்தம் உலகளாவிய அளவில் ஐபிஎல் வளர்ந்து வருவதையும், இந்த லீக்கில் பங்கைச் சொந்தமாக்கிக் கொள்ள பிரபலங்கள் காட்டும் ஆர்வத்தையும் எடுத்து காட்டுகிறது. உலகளவில் பிரபல கிரிக்கெட் லீக் தொடரின் 19வது சீசன் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்கி, மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பெங்களூருவில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது.

