முழுத்தொகையை செலுத்தினால் மட்டுமே பெட்ரோல், டீசல் கொடுக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் புதிதாக நெருக்கடி கொடுத்திருப்பதால், தெலங்கானாவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் முழுவதும் மொத்தம் 3,800 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்த பங்க்குகளில் இருந்து, நாளொன்றுக்கு சுமார் 45 லட்சம் லிட்டர் பெட்ரோலும், 35 லட்சம் லிட்டர் டீசலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வழக்கமாக, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் பெட்ரோல், டீசலுக்கு சில நாட்கள் கழித்துதான் பணம் கொடுப்பார்கள். இதனால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் பணப்புழக்கம் இருந்தது. விற்பனையும் சுமுகமாக நடைபெற்று வந்தது.
தற்போது எண்ணெய் நிறுவனங்கள் புதிய விதியை அறிமுகம் செய்துள்ளன. அதாவது பங்க் உரிமையாளர்கள், நிலுவைத் தொகை உள்பட கொள்முதலுக்கான முழு தொகையையும் கொடுத்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் அனுப்பப்படும் என்று தெரிவித்து, பெட்ரோல் பங்க்குகளுக்கு எரிபொருள் அனுப்புவதை நிறுத்திவிட்டன. இதனால், முழு தொகையையும் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு பங்க் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், பெட்ரோல் விற்னையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில், கையிருப்பில் இருந்த பெட்ரோல், டீசல் விற்பனை முடிந்த பிறகு, அடுத்த லோடு வரும் வரை, பெட்ரோல் பங்க்குகளை தற்காலிகமாக மூடி வைத்துள்ளனர். தலைநகர் ஹைதராபாத்தின் உப்பல், அமீர்பேட், குகட்பள்ளி, பேகம்பேட், எல்.பி. நகர் உள்ளிட்ட இடங்களில், பல பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டு இருப்பு இல்லை “நோ ஸ்டாக்” என்ற அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.
பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால், திறந்திருக்கும் பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. சில இடங்களில் வாகன ஓட்டிகள் சுமார் 4-5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் நிரப்பிச் செல்கின்றனர். சில இடங்களில், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாய்த்தகராறு கூட ஏற்படுகிறது. மேலும் சில இடங்களில், போக்குவரத்து காவலர்கள் இறங்கி கூட்டத்தை கட்டுப்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.
இதற்கிடையே, பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சி, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முழு கொள்ளளவு பெட்ரோலை நிரப்பிச் செல்கின்றனர். இதனால், பெட்ரோல், டீசலுக்கு மேலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, உப்பல், மல்லபூர், கட்கேசர், அத்தபூர், கடேதான், சந்திரயான்குட்டா, பேகம்பேட், அமீர்பேட், எர்ரகட்டா, சனத்நகர், குகட்பள்ளி, வனஸ்தலிபுரம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் கிடைக்காமல் ஆட்டோ ஓட்டுநர்களும் வாகன ஓட்டிகளும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
சங்காரெட்டி, நாராயண்கேட், கரீம்நகர் ஆகிய மாவட்டங்களிலும் இதேபோன்று பெட்ரோல், டீசல் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில், எண்ணெய் நிறுவனங்கள் தேவையின்றி புதிய விதியை அறிமுகம் செய்து, தங்களை அலைக்கழிப்பதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கிடையே, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அதிக அளவில் பெட்ரோல், டீசலை வாங்குவதால் வழக்கத்தை விட 2.5 முதல் 3 மடங்கு விற்பனை அதிகரித்துள்ளது என்று தெலங்கானா பெட்ரோல் டீலர்கள் சங்கத்தின் தலைவர் மர்ரி அமரீந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் எண்ணெய் நிறுவனங்களான ஹெச்.பி.சி.எல்., ஐ.ஓ.சி.எல்., பி.பி.சி.எல் ஆகியற்றில் போதுமான அளவுக்கு பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளது என்றும், பெட்ரோல் பங்க்குகளுக்கு விநியோகம் தடையின்றி நடைபெறுகிறது என்றும் தெலங்கானா பெட்ரோல் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, நிலைமையை கண்காணித்து வருவதாகவும், உண்மையிலேயே தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் மாநில பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளது.

