மனிதர்கள் பலவிதம். அதில், எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடாதவர்கள் ஒரு தனி வகை. இரண்டு நண்பர்கள் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டாலும், அதில் ஒருவர் மட்டும் குண்டாகாமல் அப்படியே இருப்பார். “எப்படிடா இவ்வளவு சாப்பிட்டும் ஒல்லியாகவே இருக்க?” என்று நாம் அவரை பார்த்து பொறாமையுடன் கேட்டிருப்போம்.
சமூக வலைதளங்களில் கூட இது குறித்த நகைச்சுவையான மீம்களை நீங்கள் பார்த்திருக்கலாம். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது சிலருக்கு உடல் எடை கூடுவது அப்பட்டமாக தெரியும். ஆனால், சிலர் என்னதான் சாப்பிட்டாலும் வெளித்தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே ஒல்லியாக இருப்பார்கள்.
இவர்களைப் பார்த்து ‘இவர்கள் கொடுத்து வைத்தவர்கள், ரொம்ப ஆரோக்கியமானவர்கள்’ என்று நாம் நினைத்து கொள்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. ஒல்லியாக இருப்பவர்கள் பலருக்கு ரத்தத்தில் ‘கெட்ட கொலஸ்ட்ரால்’ அளவு மிக அதிகமாக இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கொலஸ்ட்ரால் இருக்குமா?
உடல் எடை அதிகமாக இருப்பது கொலஸ்ட்ரால் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது என்பது உண்மைதான். ஆனால், ஒல்லியாக இருக்கும் நபர்களுக்கு கொலஸ்ட்ரால் வராது என்பது ஒரு மிகப்பெரிய கட்டுக்கதை என்கிறது American Heart Association ஆய்வுதளத்தில் வெளியான ஆய்வுக்கட்டுரை. இந்த ஆய்வு Common Misconceptions about Cholesterol என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
மருத்துவ ரீதியாக இதனை ‘மெட்டபாலிக்கலி அன்ஹெல்தி’ (Metabolically Unhealthy) என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, வெளியில் பார்க்க ஒல்லியாக தெரிந்தாலும், ரத்த பரிசோதனை செய்து பார்த்தால் அவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகவும், நல்ல கொலஸ்ட்ரால் (HDL) குறைவாகவும் இருப்பது கண்டறியப்படுகிறது. எனவே, உடல் எடையை மட்டும் வைத்து ஒருவரது ஆரோக்கியத்தை தீர்மானிக்க முடியாது.
மரபணு ரீதியான பாதிப்புகள்
சிலர் எவ்வளவுதான் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை பின்பற்றினாலும், கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும். இதற்கு ‘ஃபேமிலியல் ஹைப்பர் கொலஸ்டிரோலீமியா’ (Familial Hypercholesterolemia) என்ற மரபணு ரீதியான பாதிப்பு காரணமாக இருக்கலாம்.
இது குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் அடுத்த தலைமுறைக்கும் தொடர வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பு உள்ளவர்கள் எவ்வளவு ஒல்லியாக இருந்தாலும், இளமையிலேயே அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். Familial Hypercholesterolemia என்ற தலைப்பில் வெளியான NIH ஆய்வு, 60 முதல் 69 வயதுடையவர்களிடம் இதன் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும், 20 முதல் 29 வயதுடைய இளைஞர்களிடமும் இது மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.
உணவு முறையில் ஒளிந்திருக்கும் தவறு
“நான் ஒல்லியாகத்தான் இருக்கிறேன், அதனால் நான் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்” என்று நினைப்பது மிகப்பெரிய தவறு. பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கலந்த பானங்களை சாப்பிடும்போது, அவை உடல் எடையை அதிகரிக்காவிட்டாலும் ரத்தத்தில் கொழுப்பின் அளவை ரகசியமாக உயர்த்துகின்றன.
அதேபோல், ஒல்லியாக இருப்பவர்கள் தங்களுக்கு பயிற்சி தேவையில்லை என்று நினைத்து உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதும் ஆபத்தானது. போதிய உடல் உழைப்பு இல்லாதது இதய ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, ரத்த நாளங்களில் கொழுப்பு படியவும் வழிவகுக்கிறது.
குழந்தைப் பருவத்திலேயே தொடங்கும் ஆபத்து
கொலஸ்ட்ரால் என்பது பெரியவர்களுக்கு மட்டுமே வரும் பிரச்சனை அல்ல. இது குழந்தை பருவத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பரம்பரையாக இதய நோய் பாதிப்பு உள்ள குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு, 9 முதல் 11 வயதிற்குள்ளேயே கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்வது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
2 வயது முதலே குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கியமான உணவுகளை கொடுத்துப் பழக்க வேண்டும். உப்பு மற்றும் தேவையற்ற கொழுப்புகளை குறைப்பது அவர்களின் எதிர்கால இதய ஆரோக்கியத்திற்கு பலமான அடித்தளமாக அமையும்.
ஏன் இது ஆபத்தானது?
அதிகப்படியான கொலஸ்ட்ரால் ரத்த நாளங்களில் படிந்து, நாளடைவில் ரத்த ஓட்டத்தை தடுக்கும் ‘ஏதெரோஸ்க்லெரோசிஸ்’ (Atherosclerosis) என்ற நிலையை உருவாக்குகிறது. இது எந்தவித முன் அறிகுறியும் இல்லாமல் நடப்பதால் இதனை ‘சைலண்ட் கில்லர்’ என்று அழைக்கிறார்கள். திடீரென மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் போதுதான் பலருக்கும் தங்களுக்கு கொலஸ்ட்ரால் இருப்பதே தெரியவருகிறது.
எப்போது பரிசோதனை செய்ய வேண்டும்?
உங்கள் உடல் வாகு எப்படி இருந்தாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்தப் பரிசோதனை (Lipid Profile) செய்துகொள்வது அவசியம். குறிப்பாக குடும்பத்தில் இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். முறையான உணவு, தினசரி உடற்பயிற்சி மற்றும் விழிப்புணர்வு மட்டுமே உங்களை இந்த ஆபத்திலிருந்து பாதுகாக்கும்.

