15 ஆண்டுகலாக தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனக்கூறி தேர்தலை புறக்கணிக்கவுள்ளதாக கிராம மக்கள் பேனர் வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்- ஜெயங்கொண்டம் அருகே மெய்காவல்புத்தூர் காமராஜர் நகர் உள்ளது. உடையார்பாளையம் வட்டம், தழுதாலைமேடு ஊராட்சிக்கு உட்பட்டு வரும் இப்பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அடிப்படை வசதிகள் மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கேட்டு அப்பகுதி மக்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்ட ஆட்சியரகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். பேச்சுவார்த்தைக்கு வரும் அதிகாரிகள் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் எனக் கூறி போராட்டங்களை கலைத்து அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் தற்பொழுது வரை இங்கு வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. இதனிடையே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊர்மக்கள் ஒப்பாரி போராட்டமும் நடத்தினர்.
இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். அதனை அதிகாரிகள் அகற்ற கூறியதால் பொதுமக்கள் அதை அப்புறப்படுத்தினர். இந்நிலையில், தற்பொழுது வரை எந்த அதிகாரிகளும் நேரில் வராததால், தற்போது மீண்டும் பதாகைகளை வைத்த ஊர் மக்கள், வீடுகளில் கருப்பு கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வைத்துள்ள அந்த பேனரில், ”ஆதிதிராவிட மக்களுக்கு இந்தியா சுதந்திரமடைந்து 79 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சுமார் 150 குடும்பங்களுக்கு வீடு மனை இல்லாத நிலைமை நீடிக்கிறது. ஜனநாயக இந்தியாவில் ஜனநாயகபூர்வமாக பலமுறை மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை என்பதால்… ஜன நாயகத்தை புறக்கணிக்கிறோம்… தேர்தலை புறக்கணிக்கிறோம்..” என்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க : அரசு சலுகைகள் இல்லை: தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்த மலை கிராம மக்கள்
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பெண் அளித்த பேட்டியில், ”எத்தனையோ அதிகாரிகள் பார்த்தோம். அரசியல்வாதிகளை பார்த்தோம். செய்கிறோம் என்று சொல்கிறார்களே தவிர, நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுறோம் என்பதை யாருக்கும் இங்கு வந்து பார்ப்பது கிடையாது. எங்களை நெருங்கி வருவது கிடையாது. எங்களின் பிரச்னைகளை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு செல்வது கிடையாது” என வேதனையுடன் தெரிவித்தார்.
ஊருக்குள் ஓட்டு கேட்டு அரசியல்வாதிகள் யாரும் உள்ளே வரமுடியாது என்றும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தேர்தல் புறக்கணிப்பில் இருந்து பின்வாங்கமாட்டோம் என ஊர்மக்கள் உறுதியாக கூறியுள்ளனர். குறிப்பாக ஊர்மக்கள் இணைந்து போராடும் இந்த சம்பவத்தில் மகளிர் அணியினர் மகளிர் சுய உதவி குழுவினர், இளைஞர்கள் என பலரும் ஈடுபட்டுள்ளனர்.

