தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி என சைபர் மோசடி கும்பல் மிரட்டி, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.1 கோடி பறித்துள்ளது. இந்த வழக்கில் முகவராக செயல்பட்ட செல்போன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
சென்னை நொளம்பூரில் வசிப்பவர் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி (60). இவருக்கு கடந்தாண்டு நவ.27-ம் தேதி போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், தன்னை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டார்.
அவர், “என்ஐஏ அதிகாரிகள் கொடுத்த ரகசிய அறிக்கைப்படி, நீங்கள் பாதுகாப்பான தகவல்களை தீவிரவாதிகளுக்கு கொடுத்து பணப்பலன்களை பெற்றுள்ளீர்கள். எனவே உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளோம்.
விசாரணை முடியும் வரை நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறினாலோ, இதை வெளியே சொன்னாலோ உங்கள் வீட்டுக்கு வெளியே தயார் நிலையில் உள்ள போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்கள்.
மேலும் இது தொடர்பான தகவல்கள் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டு வெளியிடப்படும். இப்படி நடக்கக் கூடாது என்றால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தாருங்கள்” என தெரிவித்தார்.
மேலும், “நீங்கள் நிரபராதி என நிரூபிக்க உங்களது வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் நாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கவும். அதை சரிபார்த்த பின்னர், உங்கள் மீது தவறு இல்லை என்றால் பணத்தை திருப்பி அனுப்பிவிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

