60 வயது பாட்டிக்கும் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு-
திமுக ஆட்சியில் வயது வித்தியாசமின்றி பாலியல் வேட்டைக்கு பலியாகும் பெண்கள்!
கிருஷ்ணகிரியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 70 வயது முதியவரை கொன்று, அவரது மனைவியான 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
2 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, 60 வயதான மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை என ஒரு வாரகாலமாக தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இம்மியளவும் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக்குகிறது.
திறனற்ற நிர்வாகத்தால் திக்கெட்டிலும் கயவர்களை சுதந்திரமாகத் திரியவிட்டு, தினந்தினம் பெண்களையும் குழந்தைகளையும் நரக வேதனையை அனுபவிக்கச் செய்துவிட்டு, வெல்லும் தமிழ்ப்பெண்கள் என்று கூற நாகூசவில்லையா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? பல வீர மங்கைகளை உலகிற்கு ஈந்த தமிழகத்தை, பெண்கள் அஞ்சி வாழும் பகுதியாக மாற்றிய பாவம் திமுக அரசை என்றும் சும்மா விடாது!
இவ்வாறு அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இன்னொரு பதிவில் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாவது:
சட்டம் ஒழுங்கானது சுவடின்றி சிதைந்து வரும் திமுக ஆட்சியில், இன்று சென்னை திரிசூலத்தில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
கடந்த ஐந்தாண்டுகளாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அரிவாள் வெட்டு ஆகியவை அன்றாட நிகழ்வுகளாகிவிட்ட தமிழகத்தில், தற்போது எந்த ஒரு வன்முறைச் செய்தியும் மக்களுக்கு அதிர்ச்சியளிப்பதில்லை.
பயத்தோடும், கவலையோடும் ஒவ்வொரு நாளையும் கடக்கும் தமிழக மக்களின் ஓரே எதிர்பார்ப்பு தேர்தல் நாள் மட்டுமே! விடியா ஆட்சியை விரட்டியடித்து, வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழகத்தை அமைதிப்பூங்காவாக உருமாற்றும் நாளுக்காக மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் வரட்டும்! தமிழகம் மீளட்டும்!

