தனியார் துறையுடன் இணைந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இனி தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து கட்டப்படும் என்றும், இந்த கூட்டுமுயற்சியில் கட்டபடும் குடியிருப்புகளை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யலாம் என்றும் வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி சட்டசபையில் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய பாமக தலைவர் ராமதாஸ்,
“இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால்.. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் சிதைத்து விடும். அரசுக்கு சொந்தமான வீட்டு வசதி வாரிய நிலங்களை, தனியார் துறையிடம் கொடுத்து விட்டு கூட்டுமுயற்சியில் வீடுகள் கட்டப்படும். ஆனால் தனியார் நிறுவனங்கள், அவர்களுக்கான வீடுகளை எடுத்துக் கொண்டு மீதமுள்ள வீடுகளை மக்களுக்கு தருவார்கள்.
பாமர மக்களுக்காக கட்டித் தரப்பட்டும் வீடுகளை தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக்கொடுத்து விட்டால், மக்களின் கதி என்னாவது? தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் முக்கிய நோக்கம் “அனைவருக்கும் வீடு” என்பதாகும். இவ்வாறு இருக்கும் நிலையில், இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வீட்டு வசதி வாரியத்தின் நோக்கமே சிதைந்து விடும்.
“அனைவருக்கும் வீடு” என்ற நோக்கத்தை இதுவரை எட்ட முடியவில்லை என்றாலும் கூட, அந்த நோக்கத்திற்கான பாதையில் தான் வீட்டு வசதி வாரியம் பயணிக்கின்றது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்படும் வீடுகளின் விலை குறைவாகவே உள்ளது. அதனால் ஏழை எளிய மக்கள் பயனடைகின்றனர். ஆனால் தனியார் துறை, வீடுகளை மலிவான விலைக்கு விற்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் மிகச்சிறந்த கட்டிட பொறியாளர்கள் உள்ளனர். இருப்பினும், தரமான கட்டிடங்களை கட்ட தனியார் துறையிடம் கையேந்துவது, நம்மை நாமே தரம் தாழ்த்திக் கொள்வதற்குச் சமம். அதனால் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் கைவிட வேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

