மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட தம்பிதுரை, அன்புமணி உள்ளிட்ட ஆறு பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து காலியாகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 09 பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலங்களவைத் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி, “தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு பேரும் போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். அதாவது அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஸ் ஆகியோர் போட்டியின்றி தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தம்பிதுரை, அன்புமணி ராமதாஸ், எல்.கே. சுதீஷ் ஆகியோர் தாங்கள் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அதிகாரியான சாந்தியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் சான்றிதழ்களை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தேர்தலின் வெற்றி மூலம் தேமுதிக சார்பில் முதன்முறையாக எல்.கே.சுதீஷ் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளார். அதே போல், திருச்சி சிவா, தம்பிதுரை ஆகியோர் அதிக முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமனி ராமதாஸ், “மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு உதவிய எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினருக்கு நன்றி. வரும் சட்டப் பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டசி வெற்றி பெறும். திமுக மீது மக்களும் அரசு ஊழியர்களும் கோபமாக உள்ளார்கள். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். இன்னும் ஒரு சில கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளார்கள். அதனை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் ” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற செய்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி. எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை செய்வார். மற்றவர்கள் செய்ய மாட்டார்கள். கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்” என்றார்.

