திடீரென வட இந்திய பயணி ஒருவர் ரயிலின் மீது ஏறியதால் பாண்டிச்சேரி – தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் அதிகாலை பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றது. சாம்ராஜ்நகர் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் – 16219) ரயிலில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், பின்புற பொதுப்பெட்டியில் பயணிகளுக்கு தொந்தரவு செய்து வருவதாக ரயில் மடாட் (RailMadad) மூலம் புகார் பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதிகாலை 1:07 மணியளவில் காட்பாடி ரயில் நிலைய நடைமேடை எண் 4-இல் ரயில் வந்தடைந்தபோது, ரயில்வே பாதுகாப்புப் படம் (RPF) மற்றும் ரயில்வே போலீஸ் (GRP) இணைந்து அந்த நபரை வண்டியில் இருந்து இறக்கினர்.
விசாரணையில், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மங்கள் குமார் தாஸ் (22) என்பதும், அவருடன் அவரது தம்பியான விஷ்ணு தேவ் தாஸ் என்பவரும் இருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில், சுமார் இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு மங்கள் குமார் தாஸ் திடீரென தப்பி ஓடி, அங்கு நின்றிருந்த பாண்டிச்சேரி – தாதர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் – 11006) விரைவு ரயில் என்ஜினில் ஏறினார். மங்கள் குமாரின் செயலை சற்றும் எதிர்பாராத ரயில்வே காவல்துறையினர், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர், அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, அந்த நபரை எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக என்ஜினில் இருந்து கீழே இறக்கினர். இந்த சம்பவம் காரணமாக சில ரயில்கள் தாமதமானதாக ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்
இச்சம்பவம் காரணமாக மங்கள் குமார் ஏறிய பாண்டிச்சேரி – தாதர் எக்ஸ்பிரஸ் ரயில், அதிகாலை 01:46 மணி முதல் 02:55 மணி வரை மொத்தம் 69 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. அதன் பின்னர், ரயில் அதிகாலை 02:55 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்பட்டு சென்றது.
இதில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபரை காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

