தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடி மருந்துகளை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள லக்கமாள் தேவி பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக பசுவந்தனை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்து, அதன் உள்ளே பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடி மருந்துகள் மற்றும் பொருட்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் அங்கு பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தியதில், சுமார் 300 கிலோ கரி மருந்து, 200 கிலோ கரித்தூள், 300 கிலோ திரியுடன் கூடிய மருந்து குப்பிகள் உள்ளிட்ட பட்டாசு தயாரிக்க பயன்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
முன்னதாக, போலீசார் இச்சம்பவம் குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடனே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வெடிமருந்துகளை பறிமுதல் செய்ய உத்தவிட்டார். அதனைத் தொடர்ந்து வெடிமருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கும் சீல் வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, இந்த வெடிமருந்து பொருள்கள் எங்கிருந்து இங்கு கொண்டுவரப்பட்டன?, கொண்டு வந்தது யார்? இதில் தொடர்புடையவர்கள் யார்? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த வெடிப் பொருட்கள் வெடித்திருந்தால் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய பயிர்கள் சேதமடைந்திருக்கும் அபாயம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் துரிதமாக நடவடிக்கை எடுத்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள் மற்றும் பட்டாசுகளை பதுக்கி வைத்தாலோ, தயாரிப்பில் ஈடுபட்டாலோ கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், உரிய அனுமதியுடன் செயல்படும் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகள் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

