ஏன் மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு செல்கிறேன் என்பதை பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துவந்த நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துவந்த நிதிஷ் குமார் இன்று மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கு அம்மாநிலத்தில் சிலர் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில், ஏன் மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு செல்கிறேன் என்பதைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, நீங்கள் தொடர்ந்து என் மீது நம்பிக்கை வைத்து, ஆதரவு தந்துவந்துள்ளீர்கள். மேலும் அந்த நம்பிக்கையின் பலத்தில்தான் நாங்கள் பீகாருக்கும் உங்கள் அனைவருக்கும் முழு அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகிறோம்.
உங்கள் நம்பிக்கை மற்றும் ஆதரவின் சக்திதான் இன்று பீகார் வளர்ச்சி மற்றும் கண்ணியத்தின் புதிய பரிமாணத்தை வழங்க உதவியது. இதற்காக, நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடக்கத்தில் இருந்தே சட்டமன்ற, நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர் ஆக வேண்டும் என்ற ஆசை என் மனதில் இருந்தது. எனவே இந்த முறை மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.
பீகார் மக்களுடனான எனது இந்த உறவு எதிர்காலத்திலும் தொடரும் என்றும், வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான எனது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்கும் என்றும் நான் மனமார உறுதியளிக்கிறேன். அமைக்கப்படும் புதிய அரசாங்கத்திற்கு எனது முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

