டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் மிக முக்கிய மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 10 டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ள நிலையில், 4ஆவது முறையாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனைத் தொடர்ந்து, அகமதாபாத் மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
தற்போது கோப்பையை வென்றால், அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைக்கும். மேலும், கோப்பையை தக்கவைத்த முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா படைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் மிக முக்கிய மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 89 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் 7 பந்துகளுக்கு 9 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் அபிஷேக் சர்மா திணறி வரும் நிலையில் இறுதிப் போட்டியில் அவரை அணியில் இருந்து நீக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக ரிங்கு சிங், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரில் ஒருவரை அணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டால் பந்துவீச்சு பலமடையும் என்பதால் அவர் தேர்வு செய்யப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த இரு ஆட்டங்களில் பந்துவீச்சில் சற்று பலவீனத்தை வெளிப்படுத்தியது இந்திய அணி. குறிப்பாக ஒரு கூடுதல் பந்துவீச்சாளர் தேவை என்பது நேற்றைய போட்டியில் தெள்ளத் தெளிவாக தெரிந்த நிலையில் தான் அபிஷேக் சர்மா நீக்கப்பட்டு புதிய வீரர் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

