தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டம் என்றால், காவல்துறை தரப்பில் கடைசி நேரத்தில் தான் அனுமதி வழங்கப்படுகிறது என நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதன்முறையாக தேர்தலை சந்திக்கவுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் இதுவரை கூட்டணி அமையாத நிலையில், மக்கள் ஆதரவுடன் தனித்து போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தவெக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சேலத்தில் விஜய் மக்களை சந்தித்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு, அடுத்து நாளை (பிப். 23) வேலூரில் மக்களை சந்திக்கவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் முன்னேற்பாடுகளை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மேற்பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இறுதிநேரத்தில் காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
நிர்மல் குமார் அளித்த பேட்டியில், “வேலூரில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்புதான் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்த பின்னரே அதன் விவரங்களை தெரிவிக்க முடியும்.
அனுமதி பெறுவதில் எங்கள் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஒன்றரை மாதத்திற்கு மேலாக காவல்துறையிடம் தொடர்ந்து தொடர்பில் இருந்து முயற்சி செய்த பின்னரே அனுமதி கிடைத்துள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘டெல்லி டூ மீரட் இனி 55 நிமிடம் தான்’ நாட்டின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையான ‘நமோ பாரத்’ தொடக்கம்
காவல்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகள்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகேயுள்ள அகரம்சேரி பகுதியில் நாளை நடைபெறவுள்ள தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார். இதனால் இக்கூட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்காக வேலூர் காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. குறிப்பாக, வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மேற்கூரைகள் (ஷாமியானா) அமைத்தல், 4,900 நிர்வாகிகள் அமர்வதற்கேற்ப நாற்காலிகள் போடுதல், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருக்கவேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் கட்டாயமாக செய்யப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து காவல்துறை விதித்திருக்கிற அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றி, தவெக சார்பில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கிட்டத்தட்ட 5 பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடும் பணியில் கட்சி நிர்வாகிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
இறுதிநேரத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அனைத்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளும் முழுமையாக செய்யப்பட்டு, கூட்டம் சீராக நடைபெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

