ஏஐ உச்சி மாநாட்டின் நிறைவாக, ஏஐ குறித்த இந்தியாவின் கொள்கை பிரகடனத்தை அமெரிக்கா, சீனா உட்பட 89 நாடுகள் ஏற்று கையெழுத்திட்டுள்ளன.
ஏஐ உச்சி மாநாடு (AI Impact Summit 2026) டெல்லியில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கி 20ம் தேதி நிறைவுபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், அரசினர் குழுக்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சர்வதேச அமைப்புகள், தொழிலதிபர்கள் மற்றும் பெருநிறுவன அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
”அனைவருக்கும் வளம் அனைவருக்கும் மகிழ்ச்சி” எனும் பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கூகுள் சார்பில் ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு மெகா திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, இந்தியா – அமெரிக்கா இடையே ஏஐ தொழில்நுட்ப தகவல் பரிமாற்றத்துக்காக கடலுக்கு அடியில் புதிய கேபிள் வழித்தடங்களை நிறுவுவதற்கான திட்டம்; ஏஐ தொழில்நுட்பத்தை கொண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் நோக்கில் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டின் நிறைவாக, ஏஐ குறித்த இந்தியாவின் கொள்கையை அமெரிக்கா, சீனா உட்பட 89 நாடுகள் ஏற்று கையெழுத்திட்டுள்ளன.
உலக அளவில் செயற்கை நுண்ணறிவின் உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதே நோக்கம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனை, ஏஐ உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன. மத்திய அரசின் இந்த அறிவிப்பு ஏஐ- ன் நன்மைகள் மனிதர்களுக்கு சமமாகப் பகிரப்பட வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியா முன்வைத்த பிரகடனம் பின்வரும் ஏழு அம்சங்களை கொண்டுள்ளது;
ஏஐ ஜனநாயக ரீதியில் செயல்பட வேண்டும்; பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக நமக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; பாதுகாப்பும், நம்பகத்தன்மையும் முக்கியமானது; அறிவியல் துறையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்; அனைத்து மக்களும் அணுகக்கூடிய வகையில் இருக்க வேண்டும்; மனித மூலதன மேம்பாட்டை உறுதி செய்ய வேண்டும்; மீள்தன்மை, திறமையான மற்றும் புதுமையான ஏஐ சிஸ்டம்.
இந்த அறிவிப்பு குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், உலகமே ஒரு குடும்பம்” (Vasudhaiva Kutumbakam) என்ற கொள்கையை வலியுறுத்தி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு, அனைத்து நாடுகளும் பொது நன்மைக்காக ஏஐ-யை உருவாக்கி பயன்படுத்த முடியும் என்பதை உள்ளடக்கியுள்ளது. அத்துடன், டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, மலிவு இணைப்பை உறுதி செய்வதன் மூலம் ஏஐ-க்கான அணுகலை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்கிறது.
சர்வதேச அறிவியல் ஒத்துழைப்பு, மேம்பட்ட ஆராய்ச்சி உள்கட்டமைப்பு, அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்த AI-ஐப் பயன்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது. இந்தக் கொள்கைகளை உறுதியான செயல்களாக மாற்ற சர்வதேச ஒத்துழைப்புக்கான உறுதிப்பாட்டை பங்கேற்பாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.” என்றார்.

