மூளை செயல்பாட்டிற்கு தேவையான ‘கோலின்’ சத்து பலருக்கு கிடைப்பதே இல்லை. மஞ்சள் கருவை முற்றிலுமாக தவிர்ப்பது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
பலருக்கும் காலை உணவோடு முட்டை சாப்பிடுவது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால், அந்த முட்டைக்குள் இருக்கும் மஞ்சள் கருவை பார்க்கும் போதெல்லாம் “சாப்பிடலாமா? வேண்டாமா?” என்ற தயக்கம் நமக்குள் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
“மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம், அது இதயத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும்” என்ற கருத்து நம்மிடையே ஆழமாகப் பதிந்துவிட்டது. இதனால், பலரும் மஞ்சள் கருவை தூக்கி எறிந்துவிட்டு, வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடும் பழக்கத்திற்கு மாறிவிட்டனர்.
ஆனால், அறிவியல் வளர்ச்சியும் சமீபத்திய ஆய்வுகளும் இந்த தயக்கத்திற்கு புதிய விளக்கங்களை அளித்துள்ளன. நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அதே வேளையில், எதை சாப்பிட வேண்டும் என்பதில் தெளிவான புரிதல் இருப்பது அவசியம் என்கிறது இந்த ஆய்வு.
முட்டையின் மஞ்சள் கரு உண்மையில் இதயத்திற்கு பாதிப்பா? நீண்ட காலமாகவே முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால் இதய நோய்களுக்குக் காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், நவீன மருத்துவ ஆய்வுகள் ஆரோக்கியமான மனிதர்களுக்கு, முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை மிகக் குறைந்த அளவே பாதிக்கிறது என்கிறது.
உண்மையில், நம் ரத்தத்தில் ‘கெட்ட கொழுப்பு’ (LDL) அதிகரிப்பதற்கு முட்டையை விட, நாம் உண்ணும் துரித உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகளும், டிரான்ஸ் கொழுப்புகளுமே முக்கிய காரணம். சில ஆய்வுகளின்படி, மிதமான அளவில் முட்டை உட்கொள்வது இதயத்தை பாதுகாக்கும் ‘நல்ல கொழுப்பை’ (HDL) அதிகரிக்க உதவுகிறது என்று தெரிய வந்துள்ளது.
பெரும்பாலானோருக்கு முட்டை சாப்பிடுவதால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், உடலின் எதிர்வினை நபருக்கு நபர் மாறுபடும். குறிப்பாக, மரபணு ரீதியாக ரத்த கொழுப்பு பிரச்சனை உள்ளவர்கள் அல்லது அதிகப்படியான கொழுப்பு சத்துள்ள உணவுகளை ஏற்கனவே உட்கொள்பவர்கள் முட்டை விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சர்க்கரை நோய் (Diabetes) அல்லது ஏற்கனவே இதய நோய் உள்ளவர்களுக்கு முட்டை ஒரு சிக்கலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இவர்கள் ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டை சாப்பிடுவது சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இத்தகைய சூழலில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது சிறந்தது.
மஞ்சள் கருவை தவிர்ப்பதால் நாம் இழக்கும் சத்துக்கள் என்ன? மஞ்சள் கருவை வெறும் கொழுப்பு என்று மட்டும் நினைப்பது தவறு. அதில் உடலுக்கு தேவையான மிக முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் A, D, E மற்றும் B12. குறிப்பாக இரும்புச்சத்து, கோலின் மூளை வளர்ச்சிக்கும் அதன் செயல்பாட்டிற்கும் இன்றியமையாதது.
கண்ணின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் லுடீன் (Lutein) மற்றும் ஜியாக்சாண்டின் (Zeaxanthin). உயர்தர புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள். மூளைச் செயல்பாட்டிற்கு தேவையான ‘கோலின்’ சத்து பலருக்குக் கிடைப்பதே இல்லை. மஞ்சள் கருவை முற்றிலுமாக தவிர்ப்பது, இத்தகைய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்? ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு முட்டையின் அளவு நபருக்கு நபர் மாறுபடும்.
ஆரோக்கியமானவர்கள்: ஒரு நாளைக்கு 1 முதல் 2 முட்டைகள் அல்லது வாரத்திற்கு 7 முட்டைகள் வரை தாராளமாகச் சாப்பிடலாம்.
முதியவர்கள் (65 வயதுக்கு மேல்): தசை வலிமைக்கும் மூளைச் செயல்பாட்டிற்கும் தினமும் 1 முதல் 2 முட்டைகள் எடுத்துக்கொள்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகள்: வாரத்திற்கு 3 முதல் 4 முட்டைகள் வரை கட்டுப்படுத்திக் கொள்வது பாதுகாப்பானது.
இதய நோயாளிகள்: மருத்துவரின் ஆலோசனைப்படி வாரத்திற்கு 3 முதல் 4 முட்டைகள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
குழந்தைகள் மற்றும் சிறுவர்கள்: சரிவிகித உணவின் ஒரு பகுதியாக தினமும் 1 முதல் 2 முட்டைகள் கொடுக்கலாம்.
நீங்கள் முட்டையுடன் எதை சேர்த்துச் சாப்பிடுகிறீர்கள்? முட்டையின் ஆரோக்கியம் என்பது அதை நாம் எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் இருக்கிறது. முட்டையை காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் கொழுப்பில்லாத புரதங்களுடன் சேர்த்துச் சாப்பிடும்போது அது முழுமையான ஆரோக்கியத்தைத் தருகிறது.
ஆனால், அதே முட்டையை அதிகப்படியான வெண்ணெய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவுப் பொருட்களுடன் (மைதா போன்றவை) சேர்த்துச் சாப்பிடும்போதுதான் அது இதயத்திற்கு ஆபத்தாக முடிகிறது.

