சமையலில் சுவைக்காகவும், குழந்தைகளுக்கு பிடித்தமான உணவாக இருக்கும் ‘சீஸ்’ (Cheese), நமது மூளை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது உங்களில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். பொதுவாக கொழுப்பு சத்து அதிகம் என்று நாம் தவிர்க்கும் சில உணவுகளில், உடலுக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் ஒளிந்திருக்கின்றன.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் செய்யும் சிறிய மாற்றங்கள், பிற்காலத்தில் மறதி நோய் (Dementia) போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுமா என்ற கோணத்தில் தற்போது ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, முதியோர்களிடையே காணப்படும் ஞாபக மறதி மற்றும் மூளைத்திறன் குறைபாட்டை தள்ளிப்போடுவதில் சீஸ் ஒரு முக்கிய பங்கு இருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வு சொல்லும் செய்தி என்ன? ஜப்பானில் 65 வயதிற்கு மேற்பட்ட சுமார் 7,900 முதியவர்களிடம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் வாரத்திற்கு ஒரு முறையாவது சீஸ் சாப்பிடுபவர்களையும், முற்றிலும் தவிர்ப்பவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
ஆய்வின் முடிவில், சீஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களிடம் மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 24 சதவீதம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. புள்ளிவிவரப்படி பார்த்தால், சீஸ் சாப்பிடுபவர்களில் 3.4 சதவீதம் பேருக்கு மட்டுமே மறதி நோய் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், அதை முற்றிலும் தவிர்த்தவர்களில் 4.5 சதவீதம் பேருக்கு இந்தப் பாதிப்பு இருந்தது. இந்த ஆய்வு Cheese Consumption and Incidence of Dementia in Community-Dwelling Older Japanese Adults என்ற தலைபில் வெளியாகியுள்ளது.
மூளை ஆரோக்கியத்திற்கு சீஸ் எப்படி உதவுகிறது? சீஸ் சாப்பிடுவதால் மட்டும் ஒருவருக்கு மறதி நோய் வராது என்று சொல்லிவிட முடியாது. ஆனால், அதில் உள்ள சில சத்துக்கள் மூளையைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சீஸில் உள்ள உயர்தர புரதங்கள் மற்றும் வைட்டமின் K2, ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்போது, மூளை செல்கள் நீண்ட காலம் புத்துணர்வோடு இருக்கும். சீஸ் ஒரு புளிக்கப்பட்ட (Fermented) உணவு என்பதால், அதில் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன.
செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருந்தால், அது நரம்பு மண்டலத்தையும் நேர்மறையாகப் பாதிக்கும் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் ஏற்படும் தேவையற்ற வீக்கங்களைக் குறைத்து, மூளையின் சிந்திக்கும் திறனைப் பாதுகாக்கின்றன.
இந்த ஆய்வில் ஒரு முக்கியமான விஷயத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். சீஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், பொதுவாகவே மற்ற சத்தான உணவுகளையும் (காய்கறிகள், பழங்கள் போன்றவை) சேர்த்து உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர்.
எனவே, சீஸ் மட்டுமே இதற்கு காரணம் என்று கூற முடியாது, அவர்களின் ஒட்டுமொத்த உணவு முறையும் ஒரு காரணமாக இருக்கலாம். அதேபோல், சீஸ் சாப்பிடாதவர்கள் பலருக்குப் போதிய ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்காத சூழலும் இருந்திருக்கலாம். எனவே, சீஸை ஒரு ஆரோக்கியமான உணவு முறையின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.
எந்த வகை சீஸ் சிறந்தது? சீஸில் உப்பு மற்றும் கொழுப்பு இருக்கலாம் என்பதால், அதை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை மிதமான அளவில் சேர்த்துக்கொள்வதே நல்லது. இந்த ஆய்வு அனைத்து வகை சீஸ்களையும் பொதுவான ஒன்றாகவே பார்த்தது. எனவே, குறிப்பிட்ட ஒரு வகை சீஸ் தான் சிறந்தது என்று இதில் கூறப்படவில்லை.
பாலில் செய்த பொருட்களைப் பிடிக்காதவர்கள் அல்லது ஒவ்வாமை உள்ளவர்கள், இதற்குப் பதிலாக கீரை வகைகள், நட்ஸ் , மீன் மற்றும் பயறு வகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இவைகளும் மூளை ஆரோக்கியத்திற்குச் சிறந்தவை.

