மாநிலங்கள், தனிப்பட்ட நபர்களை கடந்து இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே முக்கியம் என முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் அமைப்பு சார்பில் மகா சிவராத்திரி விழாவானது நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகள் நம்பி நாராயணன், கிரண் குமார், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உள்ளிட்டோருக்கு பவ்ய பாரத் பூஷன் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவின் போது பேசிய முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி கிரண்குமார், “நாட்டின் நலனுக்காக இஸ்ரோ விண்வெளி தொழில்நுட்பத்தை கொண்டு வருகிறது. அதில் நான் ஒரு பிரதிநிதி மட்டுமே. 2040 ஆம் ஆண்டிற்குள் இந்தியர்களை நிலவுக்கு அனுப்பி, அவர்களைப் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதே இஸ்ரோவின் அடுத்த முக்கிய இலக்கு” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், “பாரத் பூஷண் விருதை பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு விளையாட்டு வீரராக இன்று மிகவும் வித்தியாசமான சூழ்நிலை இருந்ததாக நினைக்கிறேன். ஏனெனில் நான் பல ஆண்டுகளாக விளையாட்டில் பல விருதுகளைப் பெற்றுள்ளேன். ஆனால் சிவராத்திரி போன்ற ஒரு புனிதமான நாளில் இவ்வளவு பெரிய விருதைப் பெறுவது இதுவே முதல் முறை” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இளைய தலைமுறையினருக்கு இப்போது அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. அவர்களுக்கு சரியான பிசியோக்கள், பயிற்சியாளர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் தற்போதுள்ள இளைஞர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலமாக கவனச்சிதறல் உள்ளது. அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் சற்று கண்டிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை காட்டிலும் தற்போது விளையாட்டு வீரர்களிடையே அதிக எழுச்சியை காண முடிகிறது. குறிப்பாக, மாயா ஜூனியர் விம்பிள்டனுக்கு தகுதி பெற்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். ஜூனியர் விம்பிள்டனில் அவர் சாம்பியன்ஷிப்பை வென்றால் நான் மிகவும் பெருமைப்படுவேன்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து “ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது தமிழ்நாட்டு வீரரா? அல்லது வேறு மாநில வீரரா? என்பது முக்கியமல்ல. இந்திய வீரராக ஒலிம்பிக் பதக்கம் வெல்வதே முக்கியம். அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவிற்காக பதக்கம் வெல்லும்போது ஒட்டுமொத்த தேசமே பெருமைப்படும்” என்று தெரிவித்தார்.
இந்திய பேட்மிண்டனின் அடையாளமாக பார்க்கப்பட்ட சாய்னா நேவால், சமீபத்தில் பேட்மிண்டன் விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். மேலும் இவர் கடந்த 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் வெண்கலப்பதக்கத்தை வென்றுடன், ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

