தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 31 அரிய வகை உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காங்கில் இருந்து தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரையும் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று விட்டு திரும்பியுள்ளார். அவர் மீது சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து அவரது உடமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அப்போது உடமையை பிரித்துப் பார்த்த போது அபூர்வ வகை உயிரினங்கள் இருந்தன. இதனை பார்த்த சுங்கத் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதில்,ஆப்பிரிக்க பாலைவனத்தில் மட்டும் காணப்படும் அழிந்து வரும் அபூர்வ வகை சல்கட்டா ஆமைகள் 9
அமெரிக்கா மற்றும் கரீபிய தீவுகளில் வாழும் அபூர்வ பல்லிகள் 4
‘ஈஸ்டன் வாட்டர் டிராகன்’ எனப்படும் கிழக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கக் கூடிய அபூர்வ வகை உயிரினம் 1
‘ராயல் பைத்தான்’ என அழைக்கப்படும் பந்து போல் சுருளக் கூடிய ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட விஷமற்ற மலைப் பாம்புகள் 12
ஆப்பிரிக்க வனப் பகுதியில் வசிக்கக் கூடிய ‘அல்பைனோ கார்ன்’ என்ற கருப்பு மற்றும் சிவப்பு கண்கள் உடைய விஷமற்ற பாம்பு 1
நீல நாக்கு உடைய ஆஸ்திரேலியா பல்லி போன்ற உடும்பு வகைகளைச் சேர்ந்த அபூர்வ விலங்குகள் 3
வெள்ளை நிற அரசை பாம்பு எனப்படும் ஒயிட்சைட் கிங் ஸ்னேக் 1 என 31 அபூர்வ வகை உயிரினங்கள் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்த போது, பணத்திற்கு ஆசைப்பட்டு கடத்தல் குருவியாக செயல்பட்டதை ஒப்புக் கொண்டார். மேலும் பெரிய பெரிய பணக்காரர்கள் இந்த அபூர்வ வகை உயிரினங்களை வாங்கி வீட்டில் செல்ல பிராணியாக வளர்ப்பார்கள் என்றும், அவர்கள் பல லட்ச ரூபாய் கொடுத்து இந்த அபூர்வ வகை உயிரினங்களை வாங்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் அபூர்வ வகை உயிரினங்களை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள் முறையான ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக இந்த உயிரினங்களை கடத்தி வந்த பயணியை கைது செய்தனர். பின்னர், இந்த அபூர்வ வகை உயிரினங்களை தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கான அனைத்து செலவுகளையும் கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வசூலித்தனர்.
இதையடுத்து நேற்று இரவே சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து புறப்பட்டுச் சென்ற தாய் ஏர்வேஸ் விமானத்தில் இந்த அபூர்வ வகை உயிரினங்கள் திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து அபூர்வ வகை உயிரினங்களை கடத்தி வந்த பயணி மீது சுங்க சட்டம் மற்றும் வன பாதுகாப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவரை கடத்தல் குருவியாக அனுப்பிய நபர் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணையை உங்கள் சுங்கதுறை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 31 அபூர்வ வகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.

