சொந்த ஊரிலேயே வீடு கட்டி குடும்பத்தோடு வாழ ஆசைப்பட்டு கொள்ளை அடிக்க தொடங்கியதாக கைதான 60 வயது முதியவர் ஜீவன் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை யானைகவுனி மின்ட் தெருவில் ஜெயின் கோயில் உள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி இந்த கோயிலின் முகப்பு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதை கண்ட திலீப் என்ற பூசாரி அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, சாமி சிலைக்கு முன் இருந்த கதவு உடைக்கப்பட்டு, சிலையின் தங்க கிரீடம் மற்றும் நெற்றிப்பட்டை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது குறித்து கோயில் நிர்வாகி சுரேஷ் குமார் யானைகவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது முகத்தில் துணி கட்டிக் கொண்டு, செல்போன் டார்ச் லைட் அடித்தவாறு மர்ம நபர் கோயிலுக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் கோயிலில் ஆய்வு செய்து கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். அதனை தொடர்ந்து சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அந்த கொள்ளையன் சாமியார் வேடத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை சென்றது தெரிந்தது. ஆனால் அதன் பிறகு அவர் சென்ற விவரம் தெரியவில்லை.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், கச்சிக்குடா மாவட்டத்தில் ஜெயின் கோயில் ஒன்றில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் யானைகவுனி போலீசாருக்கு கிடைத்தது. அதன்படி, இந்த இரண்டு கொள்ளை சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருப்பது உறுதியானது.
இதையடுத்து யானைகவுனி காவல் ஆய்வாளர் அழகம்மாள் தலைமையில் தனிப்படை போலீசார் தெலங்கானா சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மர்ம நபர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிக்கும் 60 வயது முதியவர் ஜீவன் சிங் என்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் புனே சென்று கொள்ளையன் ஜீவன் சிங்கை கைது செய்தனர்.
ஜீவன் சிங் கொள்ளையடித்த தங்கத்தை ராஜ் பகு ரத்தோர் என்பவரிடம் விற்றுள்ளார். இவர் பிலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ராஜ் பகு ரத்தோரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் கொள்ளையடித்த பொருட்கள் எதையும் பறிமுதல் செய்ய முடியவில்லை.
இதையடுத்து கைதான ஜீவன் சிங், ராஜ் பகு ரத்தோர் ஆகியோரை போலீசார் டிரான்சிட் வாரண்ட் வாங்க புனேவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் ராஜ் பகு ரத்தோரை ஜாமீனில் விடுத்தனர். ஜீவன் சிங்குக்கு மட்டும் டிரான்சிட் வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அவரை சென்னைக்கு கொண்டு வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை ஜீவன் சிங் வாக்குமூலமாக அளித்தார். அதன்படி, ”தனக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். சொந்த ஊரிலேயே வீடு கட்டி குடும்பத்தோடு வாழ ஆசைப்பட்டேன். ஆனால் பணம் இல்லை. அதனால் கொள்ளையடிக்க சென்றேன்” என கூறினார்.
மேலும் அவர், சாமியார் வேடத்தில் சென்றால் யாருக்கும் சந்தேகம் வராது என்றும் தமிழகத்தில் சேலம், சென்னை, செங்கல்பட்டிலும், கர்நாடகாவில் பெங்களூரு மற்றும் தெலங்கானா ஆகிய பகுதிகளில் கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்தார்.
மேலும், ஜீவன் சிங் கொள்ளையடித்த பணத்தில் புனே மாவட்டம் லோவிகந்தி பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி, கூரை அமைத்து மனைவி, மகன், மகளை தங்க வைத்து இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
சென்னை சவுகார்பேட்டை ஜெயின் கோயிலில் கொள்ளையடித்த பிறகு, இவர் ஆட்டோ பிடித்து எழும்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார். அங்கு சாமியார் வேடத்தை மாற்றிக் கொண்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து புனேவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
மேலும், ஜீவன் சிங்கின் சொந்த மாநிலம் பஞ்சாப். இவர் மீது 5-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் இருப்பதாக போலீஸ் விசாரிக்கையில் தெரிந்துள்ளது. ஒருமுறை கர்நாடகா மாநிலத்தில் வீட்டை உடைத்து கொள்ளையடித்த போது பொதுமக்களே இவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால் அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வந்த அவர், அதன் பிறகுதான் ஜெயின் கோயில்களை குறி வைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி வந்துள்ளார்.
இதையடுத்து கைதான ஜீவன் சிங்கை யானைகவுனி போலீசார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

